மேலும்

சிறிலங்காவில் சிறுபான்மை பெண்கள் மீது திட்டமிட்ட பாலியல் வன்முறை – ஐ.நா குற்றச்சாட்டு

UN special rapporteur Ms Rita Izsákசிறிலங்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக சுமார் 500 தாக்குதல்களை பொது பல சேனா அமைப்பு நிகழ்த்தியுள்ளதாக, ஐ.நாவின் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான, சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைப்பின் 7வது அமர்வில், ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக 350 தாக்குதல்களையும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக 150 தாக்குதல்களையும் பொது பல சேனா நிகழ்த்தியிருக்கிறது.

பொது பல சேனாவும் ஏனைய குழுக்களும், தீவிரவாதக் கருத்துக்களை பரப்புகின்றன.

சிங்கள பௌத்தர்களே மேன்மையானவர்கள் என்று இனவாதக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டு சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுகின்றனர்.

தானும், ஏனைய ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களும் இணைந்து கடந்த ஜுலை 2ம் நாள் வெளியிட்ட அறிக்கையில், இன அடிப்படையிலான, மத நம்பிக்கைகளுக்கு எதிரான, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்கள் மீதான பொது பல சேனா உள்ளிட்ட அமைப்புகளின் தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த வேண்டும் என்றும் கோரியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா மற்றும் ஆப்கானிஸ்தான், கொலம்பியா, கொங்கோ ஜனநாயக குடியரசு, குவாட்டமாலா, ஈராக், கிர்கிஸ்தான், மியான்மார், சோமாலியா ஆகிய நாடுகளில் சிறுபான்மை பெண்கள் திட்டமிட்ட பாலியல் மற்றும் ஏனைய வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐ.நா அபிவிருத்தித் திட்டம், மற்றும் மனிதாபிமான பிரிவுகளால், சிறிலங்காவில் ஐ.நாவின் அரசியல் மற்றும் மனிதஉரிமைகள் முன்னுரிமைகளுக்கேற்ப முழுமையாக செயற்பட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *