மேலும்

பிரதான முஸ்லிம் கட்சிகளும் எதிரணியுடன் இணையத் தயார்

rauff-hakeemசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக நிறுத்தும் எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள்-

வரப்போகும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை எடுக்க வாய்ப்புகள் உள்ளன.

தமது திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஐதேகவின் அழைப்புக்காக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்திருக்கிறது.

சிறுபான்மையினரின் யோசனைகளை எதிர்க்கட்சியினர் ஏற்றுக் கொண்டால், நாம் இணைந்து கொள்ளத் தயார் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

“பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான பேச்சுக்காக எதிரணியினரின் அழைப்புக்காக காத்திருக்கிறோம்.

இன்று நடைபெறவுள்ள முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடத்தில் கூட்டத்தில், எதிரணியுடன் இணைந்து கொள்வதற்கு முன்னர், சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக கலந்துரையாடப்படவுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல் அறிக்கை மற்றும் தமது செயற்பாடுகள் குறித்த பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்னமும் இவர்களின் கூட்டு உடன்படிக்கை கையெழுத்தாகவில்லை.

இரண்டு நாட்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது தீர்மானத்தை அறிவிக்கும்.

அதேவேளை, நாளை நடக்கவுள்ள வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பில், முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்து வாக்களிக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசும், எதிரணியின் பக்கம் தாவத் தயாராகியுள்ளது.

நாளை நடக்கவுள்ள கட்சியின் முக்கிய கூட்டத்தில் எதிரணியுடன் இணைந்து கொள்வது குறித்து, தீர்மானிக்கப்படவுள்ளது.

எகிப்து சென்றுள்ள றிசாத் பதியுதீன் நாளை கொழும்பு திரும்பியதும், நடத்தப்படவுள்ள இந்தக் கூட்டத்தில், எதிரணியின் பொதுவேட்பாளரை ஆதரிப்பதா இல்லையா என்று முடிவு செய்யப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *