மேலும்

மகிந்தவை எதிர்க்கும் பொதுவேட்பாளர் நானே! – அறிவித்தார் மைத்திரிபால

maithripalaஎதிரணியின் சார்பில் சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து பொது வேட்பாளராக தான் போட்டியிடவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ( 3ம் இணைப்பு)

கொழும்பில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

அமைச்சர்கள் ராஜித சேனாரத்னவுடன் இன்று பிற்பகல் 3.10 மணியளவில் கொழும்பு நகர மண்டபத்திற்கு வருகை தந்தார் மைத்திரிபால சிறிசேன.

அங்கு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, அமைச்சர் துமிந்த திசநாயக்க ஆகியோருடன் இணைந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

maithripala

பிற்பகல் 3.20 மணியளவில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்ற ஆரம்பித்த மைத்திரிபால சிறிசேன,

“நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலராக நீண்டகாலம் பணியாற்றியுள்ளேன்.

சுதந்திரக்கட்சியின் 47 ஆண்டு வரலாற்றில், நான் 13 ஆண்டுகள் பொதுச்செயலராக இருந்துள்ளேன்.

எல்லா அரசியல் கட்சிகளுடனும் இணைந்து நாம் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்.

என்னை பொதுவேட்பாளராக நிறுத்தியுள்ள ஐதேகவுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரை பொதுவேட்பாளராக ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

தீவிரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க பிரதான பங்காற்றியுள்ளார்.

போரை வெற்றி கொண்டதற்கு நான் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், படையினருக்கும் நன்றி கூறுகிறேன்.

18வது அரசியலமைப்புத் திருத்தம் நாட்டின் ஜனநாயகத்துக்கு விழுந்த மிகப் பெரிய அடி.

இன்று காவல்துறைச் செயற்பாடுகள், சட்டம், ஒழுங்கு என்பன சவாலாக மாறியுள்ளது.

பொதுவேட்பாளராக ஐதேகவோ, ஏனைய கட்சிகளோ என்னைத் தெரிவு செய்யும் என்று நான் நினைக்கவில்லை.

நான் ஒரு சுகாதார அமைச்சராக இருந்தும் கூட, வெண்சுருட்டுப் பொதிகளில் படங்களுடன் கூடிய எச்சரிக்கையை பிரசுரிக்கும் முடிவை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

வரப்போகும் தேர்தலில் எனக்கு வாக்களியுங்கள்.

நான் 100 நாட்களில் நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை இல்லாதொழிப்பேன்.

நீதியான நியாயமான தேர்தலை நடத்த உதவும்படி, நான் காவல்துறை, இராணுவம், கடற்படையிடம் கேட்டுக் கொள்கிறேன்.

நான் அனைவரையும் பாதுகாப்பேன்.

maithripala-press

இன்று நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை. உண்மைகள் மறைக்கப்படுகின்றன. நான் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவேன்.

18வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழித்து, தற்போதைய தேர்தல் முறை மாற்றியமைக்கப்படும்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பேன்.

இந்த முடிவுக்கு எனது குடும்பம் முழு ஆதரவு வழங்கியுள்ளது.

ஆதரவற்ற மக்களுக்கு நான் உதவுவேன்.

உண்மையான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

தேர்தல் ஆணையாளர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் துமிந்த திசநாயக்க, பிரதி அமைச்சர் எம்.கே.எஸ்.குணவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *