மேலும்

இந்தியா: ‘மத்திய அரசாங்கத்திற்கும் – மாநிலங்களுக்கும்’ இடையேயான உறவில் மாற்றம் வேண்டும் – ஆய்வாளர்

India-Parlimentபுலம்பெயர்ந்த தமிழர் அதிகம் வாழும் நாடுகளுக்கு நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தனது மாநிலத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடானது நீண்டகாலமாகக் கோரிவருகிறது. இதன்மூலம் தமிழ்நாடானது இந்திய மத்திய அரசாங்கத்தில் பூகோள-மூலோபாய அதிகார பலம்பொருந்திய மாநிலமாக உருவாக முடியும்.

இவ்வாறு இந்தியாவின் தேசிய ஆங்கில நாளேடுகளில் ஒன்றான Hindustan Times ஊடகத்தில் நிறுவனம்சாரா ஆய்வாளரான Rohit Viswanath எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

இந்திய மத்திய அரசாங்கத்தைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி அறுதிப் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெற்றதானது, அந்நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் பல்வேறு சாதகமான முன்னேற்றங்கள் ஏற்படப் போவதாகப் பெரும்பாலானவர்கள் கருதினர்.

தனித்த கட்சி ஒன்று ஆட்சிக்கு வருவதானது நாட்டில் அபிவிருத்தி ஏற்படுவதற்குத் துணைபோகும் என எண்ணுகின்ற எவரும் இந்தியா கூட்டணிக் கட்சிகளால் ஆளப்பட்ட போது பல்வேறு அபிவிருத்திகளை எட்டியது என்பதை மறக்கக்கூடாது.

எதுஎவ்வாறிருப்பினும், எதுஎவ்வாறிருப்பினும், இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பானது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அனுசரணையாக இருப்பது மட்டுமல்ல. இது இதைவிடப் பல பணிகளை ஆற்றவேண்டும்.

இந்திய மத்திய அரசாங்கமானது கூட்டணிக் கட்சிகளால் ஆளப்பட்டபோது இந்தியாவில் கூட்டாட்சி வலுப்பெற உதவியது. ‘தேசிய’ கட்சியல்லாத பா.ஜ.க தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கடந்த இரு பத்தாண்டுகளில் அடையப்பட்ட நலன்களை மாற்றியமைக்க முற்படலாம். சிறிலங்காவுடனான இந்தியாவின் உறவும் தற்போதைய அரசாங்கத்தால் மாற்றியமைக்கப்படலாம்.

சிறிலங்கா மீதான இந்திய மத்திய அரசின் அணுகுமுறையானது வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்கின்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததை எதிர்த்து தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதனைப் பிரதமர் நரேந்திர மோடி கருத்திற்கொள்ளவில்லை.

சிறிலங்காத் தீவு தொடர்பில் பா.ஜ.க சாதகமான அணுகுமுறையை மேற்கொள்ளும் என்பதை இந்தியாவின் சமிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. “இந்தியத் தேர்தலின் முடிவானது சிறிலங்காவுக்குக் கிடைத்துள்ள ஆசிர்வாதமாக நோக்கப்படுகிறது. இத்தேர்தலில் மோடி வெற்றுபெற்றுள்ளார். இவரது கட்சி   அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதால் இது எந்தவொரு கட்சிகளுடனும் இணைந்து ஆட்சி நடாத்தத் தேவையில்லை. இந்த அனைத்துக் காரணிகளும் சிறிலங்காவுக்கு நன்மை பயக்குவதாகும். இந்நிலையில் சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கோட்பாடு மற்றும் நடைமுறையில் தற்போதைய புதிய அரசாங்கமானது மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பது நியாயமானதாகும்” என ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறிலங்கா அதிகாரிகள் தொடர்ந்தும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்துவதானது, சிறிலங்கா அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் போக்கை உணர்ந்து கொண்டுள்ளதையும் இதன் மீதான தமிழ்நாட்டின் செல்வாக்கைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்வது சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்தியாவின் கடந்தகால வரலாற்றை நோக்கும்போது, தனித்ததொரு கட்சியால் இந்திய மத்திய அரசாங்கம் ஆளப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா மீதான அணுகுமுறையில் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டதை உறுதிப்படுத்த முடியும். குறிப்பாக பா.ஜ.க கடந்த காலத்தில் தனித்த கட்சியாக ஆட்சிசெய்த போது கச்சதீவு சிறிலங்காவுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. இதேபோன்று சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்நிலையில் தற்போது பா.ஜ.க தனித்த கட்சியாக ஆட்சியமைத்துள்ளதானது கடந்த காலத்தில் ஏற்பட்டது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுமோ என்கின்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

சிறிலங்கா மீதான தற்போதைய இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறையானது மிகப் பெரிய கேந்திர முக்கியத்துவம் மற்றும் பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது எனத் தற்போது தீர்மானிக்க முடியாது. வகைகூறப்படாது, ஆராயப்படாது, மக்களின் உணர்வுகளைக் கருத்திற் கொள்ளாது வரையப்படும் எந்தவொரு கோட்பாடுகளும் நீண்ட கால அடிப்படையில் தோல்வியைச் சந்திப்பது வழமையானதாகும்.

இவ்வாறான ஒரு கருத்தியல் சார் சூழலானது நாட்டின் சட்டத்தில் பொருத்தமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தும். இதனால் இந்திய மத்திய அரசாங்கமானது தனது மாநிலங்கள் தமது வெளியுறவுக் கோட்பாடுகளைத் தாங்களாகவே தீர்மானிப்பதற்கான இடைவெளியை ஏற்படுத்தும் அதேவேளையில் மிகப் பெரிய புவிசார் மூலோபாய விவகாரங்களைக் கையாளவேண்டிய நிலை ஏற்படும்.

வெளியுறவு விவகார அமைச்சின் கீழ் ‘மத்திய அரசாங்கத்திற்கும் – மாநிலங்களுக்கும்’ இடையிலான உறவைப் பலப்படுத்துவதற்கான ‘கூட்டுச் செயலர்’ ஒருவரை இந்திய மத்திய அரசாங்கம் அண்மையில் நியமித்துள்ளமையானது தனது மாநிலங்களுடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நல்லதொரு தொடக்கமாகக் காணப்படுகிறது. இதற்கான மத்திய அரசாங்கமானது தமிழ்நாட்டுடன் இணைந்து செயற்பட வேண்டும். இதனால் தமிழ்நாட்டு மாநிலத்தின் வெளியுறவுச் செயலகத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.

புலம்பெயர்ந்த தமிழர் அதிகம் வாழும் நாடுகளுக்கு நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தனது மாநிலத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடானது நீண்டகாலமாகக் கோரிவருகிறது. இதன்மூலம் தமிழ்நாடானது இந்திய மத்திய அரசாங்கத்தில் பூகோள-மூலோபாய அதிகார பலம்பொருந்திய மாநிலமாக உருவாக முடியும்.

சிறிலங்காப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா ஐந்தாவதாகக் காணப்படுகிறது. சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெறும் ஆறு பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தக நடவடிக்கையில் 40 சதவீதமானவை தமிழ்நாட்டின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டின் ஊடாக இதன் இரண்டு மடங்கான முறைசாரா வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவசியமானால் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடிய தேர்வை தமிழ்நாடு கொண்டுள்ளது.

இந்தியாவில் அதிகாரப் பகிர்வுகள் மேற்கொள்ளப்பட்டால் இது ஐரோப்பிய ஒன்றியம் போன்று மாறுவதற்கான வழியேற்படும். சுயாட்சி மாநில மக்கள் இந்திய தேசத்திற்குள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் பாதுகாப்புடன் வாழ்வதற்கும் தனித்த சுதந்திரமான சந்தையில் பொருட்களைப் பரிமாறிக்கொள்வதற்குமான வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளையில், அவர்களது கொள்கை வகுப்பாளர்கள் உள்நாட்டு மக்களின் அவாக்களை மதிப்பதற்குமான வழிவகை உருவாக்கப்படும்.

*Rohit Viswanath is an independent public policy adviser.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *