மேலும்

தூக்கில் இருந்து மீண்ட மீனவர்கள் நள்ளிரவில் சென்னை திரும்பினர்

return-fishermenசிறிலங்கா அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களும் நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால், மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த மீனவர்களுக்கு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டதை அடுத்து, இந்தியத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நேற்று இவர்கள் விமானம் மூலம் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்கள் இந்தியப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து நன்றி கூறுவார்கள் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், நேற்று நள்ளிரவு புதுடெல்லியில் இருந்து மீனவர்கள் ஐவரும் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்

இந்திய அரசின் இராஜதந்திர நடவடிக்கைகளால் தான், தாங்கள் தூக்கு தண்டனையிலிருந்து தப்பியுள்ளதாக, புதுடெல்லியில் மீனவர்கள் கருத்து வெளியிட்டனர்.

“எங்கள் விடுதலைக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் ராஜபக்ச ஆகியோருக்கு, நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் ஐந்து பேருக்கும் இரு நாட்டு தலைவர்களும் மறுவாழ்வு அளித்து உள்ளனர்.

எங்களுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கிய நாளில் மிகவும் சோகமாக இருந்தோம்.

இதை அறிந்து, மறுநாள் முதல் இந்திய அதிகாரிகள், எங்கள் விடுதலைக்காக பாடுபட்டனர் என அறிந்து உருகினோம்.

கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் எங்களை சந்தித்து தைரியம் அளித்தனர்.

சாவின் விளிம்பில் இருந்த எங்களுக்கு, இந்தியாவின் மிகச்சிறந்த இராஜதந்திர நடவடிக்கை காரணமாக விடுதலை கிடைத்துள்ளது.

விரைவில் எங்கள் குடும்பத்தினரை சந்திக்க ஆவலாக உள்ளோம்.

இந்தியா – இலங்கை இரு நாட்டு உறவுகள் தொடர வேண்டும்.

இரு நாட்டு மக்களும் மகழ்ச்சியாக வாழ வேண்டும் என்று  மீனவர்கள் ஐந்து பேரும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *