மேலும்

மகிந்தவின் குற்றச்சாட்டை எரிக் சொல்ஹெய்ம் நிராகரிப்பு – கசிந்தது அறிக்கையின் பிரதி (3ம் இணைப்பு)

erik-solhaimவிடுதலைப் புலிகளுக்கு நோர்வேயும் தானும், நிதியுதவி அளித்ததாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சுமத்தியிருந்த குற்றச்சாட்டை நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் நிராகரித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு பொதுவாகவோ அல்லது இராணுவ நடவடிக்கைகளுக்கோ நோர்வே நிதியளிக்கவில்லை என்றும், நோர்வேயின் முழுமையான பங்களிப்பையும், ராஜபக்ச அறிவார் என்றும் தெரிவித்துள்ள எரிக் சொல்ஹெய்ம், அவரே விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் குற்றச்சாட்டை நிராகரித்து எரிக் சொல்ஹெய்ம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

இந்த அறிக்கையின் பிரதி ஒன்று முன்கூட்டியே தமக்கு கிடைத்துள்ளதாக, ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“அமைதி முயற்சிகளில் முழுமையாக ஈடுபடுவதற்காக, விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்துக்குத் தேவையான பொருளாதார வளங்களை நோர்வே வழங்கியது.

அதில், ஒரு வானொலித் தொடர்பு கருவியும் உள்ளது.

எனினும், அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து வெவ்வேறு தலைவர்களும் இதுபற்றிய முழுமையான தகவல்களையும் அறிந்தேயிருந்தனர்.

சிறிலங்காவில் எல்லா அமைதி முயற்சிகள் தொடர்பாகவும், கொழும்புடன் வெளிப்படைத்தன்மையை நோர்வே கடைப்பிடித்தது.

மகிந்த ராஜபக்ச அதிபராவதற்கு முன்னரே டசின் கணக்கான தடவைகள் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன்.

அமைதி முயற்சியின் எல்லா விடயங்கள் குறித்தும் அவருக்கு முழுமையாகத் தெரியப்படுத்தியிருந்தேன்.

ராஜபக்ச அமைச்சராக இருந்த போதும், பிரதமராக இருந்த போதும், எமது அமைதி நோக்கங்களுக்கு முழுமையான ஆதரவை தெரிவித்திருந்துடன், நோர்வேயின் அமைதி முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

2005 அதிபர் தேர்தலுக்குப் பின்னர், பகிரங்கமாகவும், தனிப்பட்ட முறையிலும், சிறிலங்காவுக்கு வருமாறு அவர் என்னை அழைத்திருந்தார்.

தனது சார்பில் ஒரு தொகையான அரசியல் கோரிக்கைகளை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் முன்வைக்குமாறு ராஜபக்ச என்னிடம் கேட்டுக் கொண்டார்.

எல்லாத் தகவல்களும் முறைப்படி விடுதலைப் புலிகளின் தலைமைக்கு பரிமாறப்பட்டன.

ஒரு காலப்பகுதியில் கொலைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

அமைதி முயற்சிகளில் ஆற்றிய பங்களிப்புக்காக ராஜபக்ச எனக்குத் தனிப்பட்ட முறையிலும், நோர்வேக்கும் நன்றியை கூறியிருந்தார்.

கடைசியாக அவரை 2010ம் ஆண்டு சந்தித்த போது, நோர்வேயின் அமைதி முயற்சிகளை அங்கீகரித்து, சிறிலங்காவுக்கு வருமாறும், ராஜபக்ச அழைத்திருந்தார்.

சிறிலங்காவுக்கு வந்து, அமைதியை அனுபவிக்கும் படியும் அவர் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பான மேலதிக எல்லா விபரங்களும், சிறிலங்காவில் நோர்வேயின் அமைதி முயற்சிகள் குறித்து, 2015ம் ஆண்டு வெளியிடவுள்ள நூலில், இடம்பெறும்.

விடுதலைப் புலிகள், சிறிலங்கா அரசாங்கம் என இரண்டு தரப்பினராலும், இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைக்கு, சம்பந்தப்பட்ட எல்லா தகவல்களையும், நேர்மையாக வழங்குவது எனது கடமை.

ஆனால், ஜெனிவாவில் எமக்கு எதிராக சாட்சியங்களை அளிக்க சொல்ஹெய்ம் திட்டமிட்டுள்ளார் என்று ராஜபக்ச கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *