மேலும்

ஐ.நா விசாரணை நிபுணத்துவமான முறையில் நடக்கவில்லை – சிறிலங்கா மீண்டும் குற்றச்சாட்டு.

GL-Peirisபோரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைகள், நிபுணத்துவம் வாய்ந்ததாக இடம்பெறவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதியான சுபினே நண்டியை சந்தித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கத்தின் அதிருப்தியை  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கூறப்பட்டுள்ளதாவது-

ஐ.நா விசாரணைக்கான சாட்சியங்களை சமர்ப்பிக்கும் இறுதி நாள் ஒக்டோபர் 30ம் நாள் என்று தீர்மானிக்கப்பட்ட நிலையில், ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலும், அதிகாரபூர்வமற்ற வகையிலும் அது மாற்றப்பட்டு,  மீண்டும் திருத்தப்பட்டது குறித்து, ஐ.நா இணைப்பாளரிடம் அமைச்சர் பீரிஸ் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் இணையத் தளத்தில் சாட்சியங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் 30ம் நாள் என்றும், அது நிச்சயமானது, மாற்றப்பட முடியாதது என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர்,  அந்த நாள் இறுதியானது என்ற போதிலும், சில ஆவணங்கள் சென்று சேர காலமெடுக்கும் என்பதால், குறிப்பிட்ட நாளுக்குப் பின்னர் அவை கிடைத்தாலும், அவை நிராகரிக்கப்படும் என்று கூறமுடியாது எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த முறைப்பாடுகளை செய்வதற்கான மின்னஞ்சல் முகவரி முடிவு நாளுக்குப் பின்னரும் மூடப்படவில்லை.

வெளிநாட்டு, உள்நாட்டு நபர்களின் ஆதரவுடன் போலியான முறைப்பாடுகள் செய்யப்படுவதற்கான முயற்சிகள் சிறிலங்காவில் நடந்தமை குறித்தும் சிறிலங்கா அரசாங்கம் கவலையடைந்துள்ளது.

அதற்கு ஏதுவாக வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து பெறும் நடவடிக்கைகளும், முறைப்பாடுகளுக்கு பிரதிபலனாக பணம் கொடுக்கும் நடவடிக்கைகளும் நடந்தது.

முன்னர் அறிவிக்கப்பட்ட சாட்சியங்களை சமர்ப்பிக்கும் இறுதிநாள் மாற்றப்பட்டதற்கு உரிய காரணம் ஐ.நா பேச்சாளரால் இதுவரை கூறப்படவில்லை என்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில், ஐ.நா பிரதிநிதியிடம் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *