மேலும்

எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணி உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைப்பு

joint-opposisionசிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அதிபர் தேர்தலில், பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியை உருவாக்கும் உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியை உருவாக்குவதில் முன்னிற்கும், கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி வண.மாதுலுவாவே சோபித தேரர், உடல் நிலக்குறைவாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தான், உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

எனினும், புதிய கூட்டு முன்னணியை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள உடன்பாடுகளின்மையால் தான் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவேட்பாளர் யார் என்பது தமக்குத் தெரியப்படுத்தப்படாமல், தாம் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜாதிக ஹெல உறுமய, ஜேவிபி ஆகிய கட்சிகள் கூறிவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இருந்தாலும், நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதை மையப்படுத்திய இந்த உடன்பாட்டில் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, மற்றும் ஏனைய சிறிய கட்சிகள், அமைப்புகள் இந்த உடன்பாட்டில் கையெழுத்திடத் தயாராக உள்ளன.

அதேவேளை, ஐதேக ஆதரவு பிக்குகள் முன்னணியின் தலைவரான வண. கிரம்பே ஆனந்த தேரர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கு எல்லா எதிர்க்கட்சிகளின் ஆதரவும் தேவை என்றும், அதற்குப் பொருத்தமானவர் கரு ஜெயசூரியவே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பொதுவேட்பாளர் விடயத்தில் ஐதேகவுக்குள் மீண்டும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, சமூக நிதிக்கான தேசிய அமைப்பின் பிரதிநிதிகள், கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன தலைமையில் நேற்று ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து,  கரு ஜெயசூகூரியவைப் பொதுவேட்பாளராக நிறுத்தும்படி கோரியுள்ளனர்.

ஐதேகவுக்குள் அவருக்கு அதிக ஆதரவு இல்லை என்று ரணில் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

இதற்கிடையே, பொதுவேட்பாளரைத் தெரிவு செய்யும் விடயத்தில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால், உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு சில நாட்களுக்குப் பிற்போடப்பட்டுள்ளதாக, பொது எதிரணியின் பேச்சாளரான கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதில்லை என்று ஜேவிபி உறுதியாக இருப்பதாகவும், எனினும் அவர்களுடனான பேச்சுக்கள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *