மேலும்

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க?

Ranil-wickramasingheசிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் தரப்பில் பொதுவேட்பாளராகப்  போட்டியிடத்தக்கவர்கள் என்று ஐந்து பேரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாதுளுவாவே சோபித தேரர், ரணில் விக்கிரமசிங்க, கரு ஜெயசூரிய, அர்ஜுன ரணதுங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் பெயர்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

மாதுளுவாவே சோபித தேரர், சந்திரிகா குமாரதுங்க ஆகிய இருவரும் தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கரு ஜெயசூரிய அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவின் அங்கீகாரம் தேவை.

ஏற்கனவே, ஐ.தே.க செயற்குழு கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்துள்ளதால், கரு ஜெயசூரிய பொது வேட்பாளராக தெரிவு செய்யப்படும் சாத்தியம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதிபர் வேட்பாளராக களமிறங்குவதற்கு, தேசிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் துடுப்பாட்ட வீரருமான அர்ஜுன ரணதுங்க விருப்பம் தெரிவித்துள்ள போதும், தமிழ், முஸ்லிம் வாக்குகள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் வாக்குகளைக் கவரும் திறன் இவருக்கு குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராக தெரிவு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பொதுவேட்பாளராரணில் விக்கிரமசிங்கவே தெரிவு செய்யப்படுவார் என்றும்,  தெற்கில் சிங்கள மக்களின் ஆதரவையும்,  வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவையும் பெறக் கூடிய ஒரே வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தான் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்த நாயக்க தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *