மேலும்

மேல் முறையீடு செய்யாவிடின் மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு – இந்தியாவுக்கு மகிந்த நிபந்தனை

mahinda-rajapaksha-1கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்கத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியதாகத் தகவல் வெளியிட்டுள்ளார், பிரதி அமைச்சர் பிரபா கணேசன்.

எனினும், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யாவிட்டால், தான் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என்றும் மகிந்த ராஜபக்ச நிபந்தனை விதித்திருக்கிறார்.

தன்னால் இரண்டு மூன்று நாட்களுக்குள் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என்றும், ஆனால், நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால், ஆறுமாதங்கள் வரை இழுபடக் கூடும் என்றும், தன்னிடம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியதாகவும் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது முடிவை இந்தியத் தூதரகத்துக்கு எடுத்துக் கூறும்படி, சிறிலங்கா அதிபர் கூறியதாகவும், அதன்படி தாம் இந்தியத் தூதரகத்திடம் அந்த தகவலைப் பரிமாறியுள்ளதாகவும், பிரதி அமைச்சர் பிரபா கணேசன் கூறியுள்ளார்.

பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தம்முடன் தொடர்பு கொண்டு இதுபற்றிக் கூறியதாக, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தாம் இன்று இதுபற்றி முடிவு செய்யவுள்ளதாகவும் இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மீனவர்களின் மரண தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் இதுபற்றித் தகவல் வெளியிட்டுள்ளார்.

தாம் ஏற்கனவே, இந்தியப் பிரதமர் மோடியுடன் பொதுமன்னிப்புக் குறித்து, கலந்துரையாடியதாகவும், மேல் முறையீட்டுக்காக இந்தியத் தூதரகம் பெருமளவு பணத்தை தேவையின்றிச் செலவிடுவதாகவும், சிறிலங்கா அதிபர் தன்னிடம் தெரிவித்ததாகவும் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *