மேலும்

“நாடுகளுக்கிடையே மோதலைத் தூண்டிவிட மாட்டோம்” – சிறிலங்கா கடற்படைத் தளபதி

Vice-Admiral-Jayantha-Pereraநாடுகளுக்கிடையே சிறிலங்கா மோதல்களைத் தூண்டி விடாது என்றும் அவ்வாறு மோதல்களைத் தூண்டுவது, சிறிலங்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் விரோதமானது எனவும் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்தியா தீவிர கவலை தெரிவித்த போதிலும், சீன கடற்படையின் அணுசக்தி நீர்மூழ்கியை கொழும்பில் தரிப்பதற்கு இடமளித்ததன் மூலம், சீனாவுடன் சிறிலங்கா தன்னை இணைத்துக் கொண்டுள்ளதாக, சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,

“இந்தியா அல்லது வேறெந்த நாட்டுக்கும் எதிரான மூலோபாயத்தை முன்னெடுக்க வேண்டிய எந்த தேவையும் சிறிலங்காவுக்குக் கிடையாது.

சீன நீர்மூழ்கி சங்சென்-2 மற்றொரு கப்பலான சங்சிங்டாவோவுடன் இணைந்து, கடந்த செப்ரெம்பர் 7ம் நாள் எரிபொருள் நிரப்பவும், மாலுமிகள் ஓய்வெடுப்பதற்காகவும் கொழும்பு வந்தது.

அந்தக் கப்பல்கள் செப்ரெம்பர் 13ம் நாள், சோமாலியாவுக்கு அப்பால் உள்ள ஏடன் வளைகுடாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தன.

அதே கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு கடந்த 31ம் நாள் வந்தன. அவை நேற்று புறப்பட்டுச் சென்றுள்ளன.

சில தரப்பினர் கூறியது போல அது அணுசக்தி நீர்மூழ்கியோ, அவை இரகசியப் பயணம் மேற்கொள்ளவோ இல்லை.

மேலும், இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலுள்ள இருதரப்பு உறவுகளின் நெருக்கம் காரணமாக, இருநாட்டுக் கடற்படைகளுக்கு இடையிலான உறவுகளும் பலமடைந்துள்ளன.

ஒக்ரோபர் 26ம் நாள் தொடக்கம், 30ம் நாள் வரை இந்தியாவில் நான் மேற்கொண்ட பயணத்தின் மூலம் இந்த உறவு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் தனியாக புதுடெல்லி சென்றிருந்தார்.

சீன நீர்மூழ்கியின் வருகையை அடுத்து, அவசர பேச்சுக்காக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறு.

இந்தியப் பயணத்தின் போது, அங்குள்ள ஊடகங்கள் சீனாவின் இராணுவத் தலையீடு குறித்தும், சீன நீர்மூழ்கி  கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருப்பது குறித்தும் கேள்விகளை எழுப்பின.

போர் நடந்த காலகட்டங்களில், பலநாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட போதிலும், நிரந்தரமான சீன இராணுவத் தலையீடுகள் இருக்கவில்லை.

போருக்காக பல்வேறு நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

அதற்காகவே அவர்கள் வழக்கமான பயணங்களை மேற்கொண்டனர் என்று தெரிவித்திருந்தேன்.

சீனாவிடம் இருந்து, ஆட்டிலறிகள், பீரங்கிப் படகுகள், துருப்புக்காவி கவசவாகனங்கள், போக்குவரத்து விமானங்கள், தாக்குதல் துப்பாக்கிகள், உள்ளிட்ட ஆயுதங்களை சிறிலங்கா வாங்கியுள்ளது.

2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், இந்தியாவைப் போலவே, சீனாவும் பல பிரதான திட்டங்களை சிறிலங்காவில் முன்னெடுத்து வருகிறது.

பல்வேறு மட்டங்களிலான பயிற்சிகள் உள்ளிட்ட இருதரப்பு செயற்பாடுகளில், இந்தியா முக்கியமானதொரு பங்காளராக இருந்து வருகிறது.

நான்காவது கட்ட ஈழப்போரின் போது, இந்தியாவிடம் கடனாக வாங்கப்பட்ட ஆழ்கடல் ரோந்துப் படகு முக்கிய பங்காற்றியது.

சிறிலங்கா கடற்படைக்காக இரண்டு ஆழ்கடல் ரோந்துப் படகுகளை இந்தியா கட்டி வருகிறது.

2010ம் ஆண்டில் இருந்து பல்வேறு நாடுகளின் 206 போர்க்கப்பல்கள் சிறிலங்கா வந்துள்ளன.

ஈரானிய நீர்மூழ்கி ஒன்று கடந்த ஆண்டு இரண்டு கப்பல்களுடன் கொழும்பு வந்திருந்தது.

சிறிலங்கா எப்போதுமே, பிராந்திய உறுதிப்பாட்டை நம்புகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *