சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, அது ஐ.நாவின் மீதான தாக்குதல் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்காவின் தூதுவர் கீத் ஹாப்பர், டுவிட்டரில் நேற்றுப் பதிவிட்டுள்ள குறிப்பு ஒன்றிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க முற்படுவது, ஐ.நா மீதான தாக்குதல் என்பதை சிறிலங்கா புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு சாட்சியங்களை வழங்கும் படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த சின்னத்தம்பி கிருஸ்ணராசா என்பவரை சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன், வவுனியாவைச் சேர்ந்த ஆழ்வாப்பிள்ளை விஜயகுமார் என்பவரையும், சிறிலங்கா காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐ.நா பிரதிநிதிகளிடம் விசனத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையிலேயே, அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.