மேலும்

பிடிவாதத்தை தளர்த்தினார் ரணில் – போட்டியில் இருந்து ஒதுங்க முடிவு

Ranil-wickramasingheஅடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், ஐதேக சார்பில், போட்டியிடப் போவதாக கூறி வந்த அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக் கொண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

இதையடுத்து, அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை முன்னிறுத்தும் முயற்சிகள் தீவிரமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்து விட்டதாக ஏற்கனவே அரசியல் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகின.

ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துமாறும், அதன் மூலமே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்க முடியும் என்றும், ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர வலியுறுத்தி வந்தார்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்க பிடிவாதமாக இருந்து வந்ததால், மங்கள சமரவீர அதிருப்தியுற்றிருந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவரை ஆளும்கட்சிக்குள் இணைக்கும் முயற்சிகளில், சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச ஈடுபட்டிருந்தார்.

மங்கள சமரவீர ஆளும்கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளப் போவதாக நேற்று தகவல் பரவிய நிலையில், அவர் திடீரென சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இதனால், ஐதேக வட்டாரங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்தநிலையில், ஐதேகவுக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை போட்டியிட வேண்டாம் என்று கடுமையாக வலியுறுத்தினர்.

இதையடுத்து, பொருத்தமான பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சிகளுக்குத் தாம் இடையூறாக இருக்கமாட்டேன் என்று ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு ஐதேக தலைவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

அத்துடன், சந்திரிகா குமாரதுங்கவை போட்டியில் நிறுத்தலாம் என்றும் அவர் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளரைத் தெரிவு செய்து முன்னிறுத்தும் முயற்சிகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *