மேலும்

மீனவர்களுக்கு மரணதண்டனை: இந்திய மக்களின் உணர்வுகளை சிறிலங்காவிடம் பரிமாறியது இந்தியா

சிறிலங்கா நீதிமன்றத்தினால், தமிழ்நாட்டு மீனவர்கள் ஐவருக்கு அண்மையில், விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை குறித்து, இந்திய மக்களின் உணர்வுகளை சிறிலங்காவிடம் இந்தியா தெரியப்படுத்தியுள்ளது.

தென்கொரியத் தலைநகர் சியோலில் நடைபெறும், ஆசிய பசுபிக் நாடுகளின் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்கும், இந்தியாவின் நகர அபிவிருத்தி அமைச்சர் வெங்கைய நாயுடு, சிறிலங்காவின் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவுடன் இதுபற்றிப் பேசியுள்ளார்.

மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாக, இருநாட்டு அமைச்சர்களும் நேற்று சந்தித்துப் பேசிய போது, தமிழ்நாட்டு மீனவர்கள் விவகாரம் குறித்து, இந்திய அமைச்சர் வெங்கைய நாயுடு பேசியுள்ளதாக, இந்திய அரசாங்க செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தான் முறைப்பாடு தெரிவிக்கவோ அல்லது சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவோ இல்லை என்று வலியுறுத்திய வெங்கைய நாயுடு, இந்திய மக்களின் உணர்வுகளைப் பரிமாறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

sinha-welikadaஇதற்கிடையே, மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை, சிறிலங்காவுக்கான இந்திய தூதுதர் வை.கே.சின்கா நேற்றுக்காலை வெலிக்கடைச் சிறைச்சாலையில் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வை.கே.சின்கா, தமிழ் மீனவர்கள் 5 பேரை விடுவிக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும், மீனவர்கள் தங்களது உறவினர்களுடன் தொலைபேசி மூலம் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 28ம் நாள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாத், லாங்நெட் ஆகிய இராமேஸ்வரம் மீனவர்களை சிறிலங்காயினர் சிறைப்பிடித்திருந்தனர்.

பின்னர் போதைப்பொருள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட இவர்களுக்கும், வேறு 3 யாழ்ப்பாண மீனவர்களுக்கும், கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே, நேற்று மரணதண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை இந்தியத் தூதுவர் சிறையில் சந்தித்துப் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *