மேலும்

பாப்பரசரின் பயணத்துக்கு முழு ஒத்துழைப்பு – வத்திக்கானுக்கு சிறிலங்கா வாக்குறுதி

பாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்கா பயணத்துக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக, வத்திக்கான் பிரதிநிதிகள் குழுவிடம், சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

வத்திக்கானில் இருந்து கொழும்பு வந்த மூன்று பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு நேற்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

இதன்போதே எந்த சூழ்நிலையிலும் பாப்பரசரின் பயணத்துக்கு முழுமையான பாதுகாப்பும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று சிறிலங்கா அரசதரப்பு உத்தரவாதம் வழங்கியுள்ளது.

இதையடுத்து, பாப்பரசரின் பயணம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 13ம் நாள் தொடக்கம் 15ம் நாள் இடம்பெறும் என்று திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

வத்திக்கானில் இருந்து வந்த மூன்று பிரதிநிதிகள் இதுகுறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் அடங்கிய அரசாங்க குழுவினரை சந்தித்துப் பேசிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பாப்பரசரின் பயணத்தில் சிறிலங்கா அரசாங்க தரப்பினர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததை இந்த சந்திப்பின் போது உணரக் கூடியதாக இருந்தது.

ஜனவரி மாத முதல் வாரத்தில் சிறிலங்கா அதிபர் தேர்தல் நடக்கலாம் என்று செய்திகள் வந்தாலும், தேர்தல் நாள்  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எனினும், எந்த சூழ்நிலையிலும் பாப்பரசரின் பயணத்துக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்க தரப்பினர் உத்தரவாதம் வழங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *