மேலும்

யாழ்ப்பாணத்தில் 59 முகாம்களை மூடவில்லை – சிறிலங்கா இராணுவத் தலைமையகம் மறுப்பு

Army_Sentryசிறிலங்காவில் புதிய அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் பதவிக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணக் குடாநாட்டில் 59 இராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக, வெளியான ஊடகச் செய்திகளை சிறிலங்கா இராணுவத் தலைமையகம் நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“2009 மே 19ம் நாள் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், ஒழுங்கான முறையில் பாதுகாப்பு நிலைமைகள் மீளாய்வு செய்யப்பட்டு படை நிலைகள் மாற்றியமைக்கப்பட்டன.

இது உலகின் எந்தவொரு நிபுணத்துவ இராணுவமும் கையாளுகின்ற தர நியமமே தவிர, சிறிலங்காவில் மட்டும் கடைப்பிடிக்கப்படும் புதிய ஒரு முறை அல்ல.

இதற்கமைய, வடக்கில் 2009ம் ஆண்டு மே 19ம் நாளுக்குப் பின்னர் 59 சிறிய முகாம்கள் மூடப்பட்டுள்ளன.

வடக்கில் 2009ஆம் ஆண்டு, 7 புறக்காவல்நிலைகள் (outposts) அகற்றப்பட்டன. 2010 ஆம் ஆண்டு 9 புறக்காவல்நிலைகளும், 2011ஆம் ஆண்டு 4 புறக்காவல்நிலைகளும், 2013ஆம் ஆண்டு 15 புறக்காவல்நிலைகளும், 2014ஆம் ஆண்டு 24 புறக்காவல்நிலைகளுமாக, மொத்தம் 59 புறக்காவல் நிலைகள் மூடப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு எந்தவொரு புறக்காவல் நிலையும் மூடப்படவில்லை.

புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னரே இந்த 59 புறக்காவல் நிலைகளும் அகற்றப்பட்டுள்ளன.

இராணுவத் தலைமையகம், வடக்கில் தொடர்ந்து பாதுகாப்பு நிலைமைகளைக் கண்காணித்தும், ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமிருக்காது” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வடக்கில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் இதனால், விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, சிறிலங்கா இராணுவத் தலைமையகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.