சிறிலங்கா படைகளின் இப்போதைய படைபலம்- அதிகாரபூர்வமாக அறிவிப்பு
2026-ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் நிலவரப்படி, சிறிலங்கா இராணுவத்தில் 8,311 அதிகாரிகள் மற்றும் 122,540 ஏனைய தரத்தினர் உள்ளிட்ட, 130,851 படையினர் உள்ளதாக, நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பாதுகாப்பு அமைச்சரின் சார்பாக, நேற்றுப் பதிலளித்த, அரசாங்க பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, சிறிலங்கா ஆயுதப் படைகளின் தற்போதைய பலம் மற்றும் பொது மன்னிப்புக் காலங்களில் சேவையிலிருந்து விலகிய பணியாளர்களின் எண்ணிக்கையை வெளியிட்டார்.
2026-ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் நிலவரப்படி, சிறிலங்கா இராணுவத்தில் 8,311 அதிகாரிகள் மற்றும் 122,540 ஏனைய தரத்தினர் உள்ளிட்ட, 130,851 படையினரும்,
சிறிலங்கா கடற்படையில் 3,067 அதிகாரிகள் மற்றும் 31,923 ஏனைய படையினர் உட்பட மொத்தம் 34,990 படையினரும்,
சிறிலங்கா விமானப்படையில் 2,140 அதிகாரிகள் மற்றும் 25,159 ஏனைய படையினர் உட்பட 27,299 படையினரும் இருந்தனர்.
இராணுவத்தினர் சட்டப்பூர்வமாகப் பணியிலிருந்து விலகுவதற்கு ஏதுவாக கடந்த ஐந்தாண்டுகளில் இரண்டு பொதுமன்னிப்புத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
முதல் பொது மன்னிப்பு 2022 நவம்பர் 5 முதல் டிசம்பர் 31 ஆம் நாள் வரையிலும், இரண்டாவது பொது மன்னிப்பு 2024 ஏப்ரல் 20 முதல் மே 20 நாள் வரையிலும் வழங்கப்பட்டது.
இந்த இரண்டு பொதுமன்னிப்புக் காலங்களில் மொத்தம் 34,983 படையினர் சட்டப்பூர்வமாக ஆயுதப்படைகளிலிருந்து விலகியுள்ளனர்.
அவர்களில், 31,088 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள், 2,501 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் 1,394 பேர் விமானப்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
