இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய சிறிலங்காவை வலியுறுத்துகிறார் சந்தோஷ் ஜா
இந்தியாவும் சிறிலங்காவும், இருதரப்பு வர்த்தகத்தின் பெரும்பகுதியை இந்திய ரூபாயில் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்வது இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க நிதி நன்மைகளைக் கொண்டுவரும் என்றும் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் நேற்று நடைபெற்ற “ரூபாய்க்கு ரூபாய்: இந்தியா-சிறிலங்கா வர்த்தக வழித்தடத்தை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பிலான வட்டமேசை கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்திய ரூபாயில் வர்த்தகத் தீர்வுகள் மெதுவான வேகத்தில் நடைபெற்று வருகிறது.
வணிகத்தில் இது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், ரூபாய் அடிப்படையிலான பரிவர்த்தனைகள் அதிகரித்து, இரு நாடுகளிலும் உள்ள வர்த்தகர்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் கணிசமான நன்மைகளை வழங்கும்.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான ஆண்டு வர்த்தகம் தற்போது சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது.
இருப்பினும், பெரும்பாலான பரிவர்த்தனைகள் மூன்றாவது நாணயமான அமெரிக்க டொலர் மூலமாகவே தீர்க்கப்படுவதால், இரு நாடுகளுக்கும் கூடுதல் செலவுகள் ஏற்படுகின்றன.
நாணய மாற்றுச் செலவுகள், பரிவர்த்தனை மற்றும் தீர்வு தாமதங்கள், அத்துடன் அமெரிக்க டொலரின் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.
மூன்றாவது நாணயத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வர்த்தகத்தை நேரடியாக ரூபாயில் தீர்வு செய்தால், இந்தச் செலவுகளில் பலவற்றைத் தவிர்க்கலாம்.
இந்திய ரூபாயின் சர்வதேசப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, இந்திய அரசாங்கம், இந்திய ரிசர்வ் வங்கி மூலம், பல ஆண்டுகளாகப் பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா வணிகங்களும் தனிநபர்களும் இப்போது நியமிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம் இந்திய ரூபாய் நிதியுதவியைப் பெற முடியும் என்றும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அனைத்துலக வர்த்தகத்தில் உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக மத்திய வங்கிகள் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், முன்னேற்றம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சிறிலங்கா மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் நன்மைகள் சென்றடையும் வகையில், அதிக வர்த்தகம் ரூபாயில் நடைபெற வேண்டும்,என்றும் அவர் கூறினார்.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தனியார் துறையைச் சேர்ந்த பல மூத்த வங்கியாளர்களும் ரூபாயின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதை ஆதரித்தனர்.
வணிகங்களிடையே இந்த வழிமுறை குறித்த விழிப்புணர்வு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், ரூபாய் அடிப்படையிலான வர்த்தகத் தீர்வுகள் குறைவாகவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த சில மாதங்களில் டாடா குழுமத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் சிறிலங்காவில் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வர்த்தகப் பரிவர்த்தனைகளை நடத்தியுள்ளதாகவும், அந்தப் பரிவர்த்தனைகளில் கணிசமான பகுதி இந்திய ரூபாயில் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்தியன் வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
