முதல் முறையாக அமெரிக்க மசகு எண்ணெய் சிறிலங்கா வந்தது- ரஷ்யாவை கைவிட்டது
சிறிலங்காவுக்கு நேற்று முதன்முறையாக அமெரிக்க மசகு எண்ணெய் வந்து சேர்ந்துள்ளது. இது எரிபொருள் விநியோகத்தை நிலைப்படுத்தியுள்ளதாக, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வரி பேச்சுக்களின் போது, எரிபொருள் கொள்வனவுக்கான அனைத்துலக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் போது, அமெரிக்க மசகு எண்ணெயான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்டை (WTI) சேர்க்க சிறிலங்கா முடிவு செய்தது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையாகும்.
இந்த நிலையில், தனது பணியகத்தால் கோரப்பட்ட 89,000 தொன் மசகு எண்ணைய் தற்போது வந்து சேர்ந்துள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.
இந்த நிலையில், குறுகிய காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் தேவை, என்றும் அவர் கூறியுள்ளார்.
“எங்களிடம் போதுமான கையிருப்பு உள்ளது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வது குறித்து நாங்கள் எந்த இறுதி உடன்பாட்டையும் எட்டவில்லை.
குறுகிய காலத்திற்கு அதற்கான தேவையும் இல்லை, என்று மயூர நெத்திகுமாரகே கூறினார்.
அதேவேளை, எரிபொருள் விலை திருத்தம் குறித்து இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
