மேலும்

பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்தில் காணிகள் விடுவிப்பு குறித்து தீர்மானம் இல்லை

வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆராயப்பட்டுள்ள போதும், அவற்றை விடுவிப்பது குறித்த தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

பாதுகாப்பு அமைச்சரான அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில், நேற்றுமாலை நாடாளுமன்றத்தில், பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்கள் மட்ட ஆலோசனைக்  குழுவின் கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், ​​முன்னர் எழுப்பப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் குறித்தும், வடக்கு மாகாண மற்றும் ஆளும், எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் குறித்தும் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிப்பது மற்றும் மூடப்பட்ட வீதிகளை மீண்டும் திறப்பது தொடர்பான விடயங்கள் குறித்து  சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன்,  அதற்கான சாத்தியமான தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டன.

மத வழிபாட்டுத் தலங்களுடன் தொடர்புடைய நிலங்கள் குறித்த பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய பிந்திய  தகவல்களையும் சிறிலங்கா அதிபர் கேட்டறிந்தார்.

2025-ஆம் ஆண்டில் மட்டும் வடக்கு மாகாணத்தில் சுமார் 1,000 ஏக்கர் தனியார் நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய நிலங்களை முறைப்படி விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டார்.

வாழ்வாதாரங்களுக்குத் தேவையான நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டு வரும் அதேவேளையில், தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக நில வளங்களை நிர்வகிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் காணிகள் விடுவிப்பு குறித்த எந்த தீர்க்கமான முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

சிங்கள- தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக, வலி.வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள குறிப்பிட்டளவு காணிகள் விடுக்கப்படும் என்றும் சிறிலங்காவின் அமைச்சர்கள், மற்றும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *