தமிழர்களை இலக்கு வைத்த பாலியல் வன்முறைகள்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் ஊடகப் பேச்சாளர் ஜெரிமி லோரன்ஸ், கடந்த 13 ஆம் திகதி “சிறிலங்கா- மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறை“ தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ஒரு மிக முக்கியமான ஆவணம்.
“சிறிலங்காவில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைக்கு பொறுப்புக்கூறல்“ என்ற தலைப்பில்- “நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் நீதிக்கான நம்பிக்கையையும் கூட“ என்ற உப தலைப்பில் – இந்த அறிக்கை ஆவணம் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விரிவான ஆய்வு அறிக்கை, பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. உறுதிப்படுத்துகிறது. பொறுப்புக்கூறலுக்கான அழுத்தங்களை கொடுக்கிறது.
ஆனால், சிறிலங்காவின் ஊடகங்களில் பெரிதாக இந்த அறிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை. தமிழ் ஊடகங்கள் கூட, இதனை கவனிக்காமல் போனது ஆச்சரியமானது.
இந்த அறிக்கையில் அடங்கியுள்ள பல விடயங்கள் பொறுப்புக்கூறலுக்கு, கடந்த ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு, வலுவான தளத்தை உருவாக்கக் கூடியது.
“பாலியல் வன்முறையானது அனைத்துலக மனித உரிமைச் சட்டம், அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் மற்றும் அனைத்துலக குற்றவியல் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.
இது அனைத்துலக சட்டத்தின் ஒரு தீவிரமான மீறலாக அமைவதுடன், போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது இனஅழிப்பு செயல்களாகவும் வகைப்படுத்தக் கூடியது” என்று மிகத் தெளிவாக கூறுகிறது இந்த அறிக்கை.
தமிழின அழிப்புக்கான ஒரு முயற்சியாக, பாலியல் வன்முறை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பது இந்த அறிக்கையில் உறுதியாகப் பதிவாகியிருக்கிறது.
சிறிலங்காவில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பை நிரூபிக்க முடியாது என்றும், அதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், தமிழர் தரப்பிலேயே அதனை குறைமதிப்பிற்குட்படுத்தியவர்கள் உள்ளனர்.
அதனை காரணம் காட்டி, இனஅழிப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் இருந்து நழுவியவர்களும், அதன் மூலம், அரசாங்கத்தையும் அரசபடைகளையும் நெருக்கடியில் இருந்து காப்பாற்றியவர்களும் தமிழ் அரசியல் பரப்பில் இருக்கின்றனர்.
ஆனால் திட்டமிட்ட பாலியல் வன்முறைகள், தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும், இதனை ஒரு இனஅழிப்பு செயலாக அடையாளப்படுத்த முடியும் என்றும், பொறுப்புக்கூறலுக்கான ஒரு புதிய வெளியை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது இந்த அறிக்கை.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தமிழர்கள் மீது போர்க்காலத்தில் இனஅழிப்பு நிகழ்த்தப்பட்டது என்பதை, நிரூபிப்பதற்கான முயற்சிகளில் வலுவாக செயற்பட முடியும்.
இந்த அறிக்கையின் அறிமுகப் பகுதியில்- முதலாவது பந்தியிலேயே, “பாலியல் வன்முறை அரச படைகளால் “வேண்டுமென்றே, பரவலான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் ஆயுத மோதலின் போதும் அதற்குப் பிந்திய காலப்பகுதியிலும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள்- தனித்தனி சம்பவங்களின் தொகுப்பாக அல்லாமல், திட்டமிடப்பட்டதும், பரந்துபட்டதும், அமைப்பு சார்ந்ததுமான மீறல்களின் ஒரு வடிவமாக இருந்தது என்று ஐ.நாவின் அறிக்கை குறிப்பிடுகிறது.
இவற்றை திட்டமிட்டு, பரந்தளவில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.
இதனை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாக கருதப்படக் கூடியவை என்கிறது. இன அழிப்பு என்று அடையாளப்படுத்தக் கூடியது என்றும் கூறுகிறது.
இவற்றை ஏன் செய்தார்கள் என்பதற்கும் விளக்களித்திருக்கிறது அந்த அறிக்கை.
“தனி நபர்கள் மற்றும் சமூகங்களை அச்சுறுத்துவதற்கும், தகவல்களை அவர்களிடமிருந்து கட்டாயப்படுத்தி பெறுவதற்கும், ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும், பயம் மற்றும் அவமானம் நிறைந்த பரவலான சூழலை உருவாக்குவதற்குமான ஒரு மூலோபாய கருவியாக இந்த பாலியல் வன்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடுகிறது அந்த அறிக்கை.
அடுத்த கட்டமாக இந்த பாலியல் வன்முறைகள், நிறுவன ரீதியாக அனுமதிக்கப்பட்டிருந்தன என்றும், மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களை குறிவைத்திருந்தது என்றும் கூறுகிறது.
ஆயுத மோதல்களின் போது இடம்பெறும் பாலியல் வன்முறைகளை, போர்க்குற்றங்களாக, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாக சர்வதேச சட்டங்கள் அடையாளப்படுத்துகின்றன.
இவ்வாறான நிலையில், ஐ.நாவின் இந்த அறிக்கை, மோதலின் போதும் மோதலுக்கு பின்னரான காலகட்டத்திலும்- பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 23 பெண்களும் 4 ஆண்களுமாக, பாதிக்கப்பட்ட 27 பேர், இந்த அறிக்கையில் சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.
இதன்மூலம், பாலியல் வன்முறைகள் போரின் போது, ஆயுதமாக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கையின் 12வது பிரிவில், பாலியல் வன்முறை, ஏன் – யாரால் – யாரை இலக்கு வைத்து இது மேற்கொள்ளப்பட்டது என்பதை விபரிக்கிறது.
“சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு போர் நடந்த காலத்தில், பெரும்பாலும் அரசின் பாதுகாப்பு அணியினரால், மோதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அச்சுறுத்தும், தண்டிக்கும், கட்டுப்படுத்தும் கருவியாக, பாலியல் வன்முறை பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்கள் பெரும்பாலும் தமிழ் மக்களையும், பெண்கள் உட்பட விடுதலைப் புலிகளாக கருதப்பட்டவர்களையும், உண்மையான புலி உறுப்பினர்களையும் குறி வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
அதேவேளை, 14வது பந்தியில், விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் உட்பட மோதலால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகங்கள் பரவலாக குறி வைக்கப்பட்டிருந்தது என்றும், இந்தச் செயல்களில் பொதுவாக அரச பாதுகாப்பு அமைப்புகள் தொடர்புபட்டிருந்ததையும், அடிப்படையாகக் கொண்டு – அவை ஆயுத மோதல்கள் தொடர்பான பாலியல் வன்முறை என வகைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
மோதல் காலத்திலும் பின்னரும் சிறிலங்கா பாதுகாப்பு அமைப்பின் பல பிரிவுகளை சேர்ந்த பணியாளர்களால், பெரும்பாலும் அரசால் நடத்தப்பட்ட தடுப்பு முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்புணர்வு, பாலியல் வதை மற்றும் பிற பாலியல் துன்புறுத்தல்களை நம்பகமான அறிக்கைகள் பதிவு செய்துள்ளன.
சிறிலங்கா இராணுவம், கடற்படை, விமானப்படை, குற்றப் புலனாய்வுத்துறை, பயங்கரவாத புலனாய்வு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றின் உறுப்பினர்களும் இந்த அமைப்புகளுடன் தொடர்புடைய ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற துணை இராணுவ குழுக்களும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்த மீறல்களை நிகழ்த்தியதாக முதன்மையாக குற்றம்சாட்டப்பட்டவர்கள், அரச பாதுகாப்பு அதிகாரிகளாக இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக தமிழின அடையாளம் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த கால தொடர்பு இருந்ததாக கருதப்பட்ட காரணங்களுக்காக குறி வைக்கப்பட்டுள்ளனர் என்கிறது இந்த அறிக்கை.
இது ஆயுத மோதலுடன் தெளிவான தொடர்பை கொண்டுள்ளன என்பதையும், இவை ஆயுத மோதல் தொடர்பான பாலியல் வன்முறை என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டுகளாக பதிவு செய்யப்படுகின்றன என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது.
இதன்படி, சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் போதும் அதற்குப் பின்னரான காலகட்டத்திலும் மோதலின் போதான பாலியல் வன்முறைகள் இடம் பெற்றன என்பது தீர்க்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு முக்கியமான ஆதாரம். ஏனென்றால் சர்வதேச சட்டங்களின்படி, மோதல்களில் பாலியல் வன்முறைகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாக – போர் குற்றங்களாக மாத்திரமன்றி- இன அழிப்பு குற்றமாக, அல்லது இனப்படுகொலை கூட்டமாகவும் கூட வகைப்படுத்தப்பட்டுள்ளது.
எதிரி மக்களையும், சமூகங்களையும் பயமுறுத்த, அவமானப்படுத்த, இடம்பெயர வைக்க மற்றும் அழிக்க ஒரு ஆயுதமாகவும், போர்த்தந்திரமாகவும் பாலியல் வன்முறை ஒரு கருவியாகபயன்படுத்தப்படுகிறது.
இது மோதலின் ஒரு இணை விளைவு மட்டுமல்ல, அனைத்துலக சட்டத்தின் கீழ் ஒரு போர்க்குற்றமாகவும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகவும், இனப்படுகொலைச் செயலாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள, வேண்டுமென்றே செய்யப்படுகின்ற ஒரு உத்தியாகும்.
பாலியல் வல்லுறவு, பாலியல் அடிமைத்தனம், கட்டாய பாலியல் தொழில் மற்றும் கட்டாய கர்ப்பம் ஆகியவற்றை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டம், வகைப்படுத்துகிறது.
ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், 1998ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு, ஒரு முக்கியமான முன்னுதாரணமானது.
இலக்கு வைக்கப்பட்ட ஒரு குழுவை அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும்போது, பாலியல் வல்லுறவு இனப்படுகொலைச் செயலாக இருக்கலாம் என அது அங்கீகரித்தது.
இந்த சட்ட கட்டமைப்புகள் இருந்தபோதிலும், குற்றவாளிகள் மீது வழக்குத் தொடருவது வரலாற்று ரீதியாக அரிதானது.
மோதலுக்குப் பிந்தைய சூழல்களில் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் கலாசாரம் பெரும்பாலும் நீடிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள ஏராளமான மோதல்களில் பாலியல் வன்முறை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ருவாண்டா, கொங்கோ, சியராலியோன், மியான்மர், எதியோப்பியா, சூடான், உக்ரைன் போன்ற நாடுகளிலும் மோதல்களின் போது பாலியல் வன்முறை ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இருந்தபோதும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்ற பிரச்சினை உலகளாவிய ரீதியாக தொடர்கிறது.
சிறிலங்காவில் அது இன்னும் மோசமானதாக உள்ளது என்பதை, ஐ.நாவின் அறிக்கையை முழுமையாக படிக்கும் போது உணர்ந்து கொள்ள முடியும்.
காலங்காலமாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முற்படவில்லை.
தற்போதைய அரசாங்கம் அதற்கான வாக்குறுதிகளை கொடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா, அதற்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
உள்நாட்டு பொறுப்புக்கூறல் முயற்சிகளில் ஒரு பகுதியாக, இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, சுயாதீனமான வழக்குத்தொடுநர் அலுவலகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி சிறிலங்காவின் சர்வதேச கூட்டாளிகள், பொறுப்புக்கூறலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
சிறிலங்காப் படையினரின் பாலியல் வன்முறை தொடர்பான குற்றங்களை விரிவாக ஆவணப்படுத்தி, அரச படைகளில் உள்ள ஒழுங்கீனங்களை அம்பலப்படுத்தியிருக்கிறது இந்த அறிக்கை .
2011 ஆம் ஆண்டில் மட்டும் கடமையில் இருந்த இராணுவத்தினர் தொடர்பாக 445 பாலியல் வன்முறை சம்பவங்களும், விடுப்பிலிருந்து இராணுவத்தினர் தொடர்பான 371 சம்பவங்களும் பதிவாகி இருப்பதாக இது உறுதிப்படுத்தியிருக்கிறது.
இது சிறிலங்காவின் அரச படையமைப்பு எந்தளவிற்கு ஒதுங்கீனமும், குற்றப் பின்னணி கொண்டவர்களால் நிறைந்திருப்பதையும், வெளிப்படுத்துகிறது.
பொறுப்புக்கூறலுக்காக ஐ.நா பல்வேறு பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கிறது.
பாலியல் வன்முறைக்கு எதிரான அனைத்துலக உடன்பாடுகள், பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ள, சிறிலங்கா அரசாங்கம், தனது கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறது.
பெண்களும், ஆண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இந்த அறிக்கையில், கூறப்பட்டுள்ள மற்றொரு அதிர்ச்சியான விடயமாகும்.
தண்டனையின்மையை வலுவாக சாடுகின்ற இந்த அறிக்கை, அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதில் அனைத்துலகத்தின் பங்கையும் எடுத்துரைக்கிறது.
உள்நாட்டு பொறுப்புக் கூறலை முன்னேற்றுவதற்கும், பாதுகாப்பு தரப்பு, நீதித்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் வலியுறுத்துகிறது.
அதற்கு அப்பால் அனைத்துலக சமூகம் தேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறிய இடங்களில், அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களினால் வழங்கப்படும் வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதித்தல், அனைத்துலக நீதி முயற்சிகளுக்கான விரிவான ஆதரவு வழங்குதல் ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறது.
அத்துடன் பொதுமக்கள் வாழும் பகுதியில் இருந்து போர் நினைவு சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும், இத்தகைய சின்னங்கள் தொடர்ந்து நிலைத்திருப்பது உயிர்தப்பியவர்களின் மன உளைச்சலை அதிகரிக்கும் என்றும் கூறியிருக்கிறது.
பாதுகாப்புத்துறை சீர்திருத்தம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ள அதேவேளை, இருதரப்பு இராணுவ பரிமாற்றங்கள், பயிற்சி திட்டங்களில் பங்கேற்பதற்கும், ஐ.நா அமைதிப்பணிகள் அல்லது ஐ.நா அமைப்பின் பொறுப்புகளில் நியமிக்கப்படுவதற்கும் நபர்களை தெரிவு செய்வதற்கு முன்னர், மோதல் சார் பாலியல் வன்முறைகளில் தொடர்புபட்டுள்ளனரா என்பதை கடுமையான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஐ.நா வலியுறுத்தியிருக்கிறது.
சிறிலங்கா அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது, அவர்களின் பொறுப்பாகும்.
இதுவரை காலமும் இந்த மீறல்களை அனைத்துலக சட்டத்தின் முன் கொண்டு செல்வதற்கு இருந்த தடைகளை அகற்றுவதற்கு இந்த அறிக்கை பயன்படக் கூடியது.
பொறுப்புக்கூறல் தொடர்பான அழுத்தங்கள் குறைந்து கொண்டிருந்த சூழலில் அதனை மீண்டும் உயிர்ப்பிக்க வைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
-சுபத்ரா
வழிமூலம்- வீரகேசரி வாரவெளியீடு (18.01.2026)

