மேலும்

தீர்மானத்தை நிராகரித்தது சிறிலங்கா – ஜெனிவாவில் நடந்தது என்ன?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இன்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட A/HRC/60/L.1 தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஜெனிவாவில் இன்று நடந்த அமர்வில் சிறிலங்காவின் எதிர்ப்பு இருந்தபோதிலும், இந்தத் தீர்மானம் 30 நாடுகளின் கூட்டணியின் ஆதரவுடன், வாக்கெடுப்பு நடத்தப்படாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைக் கொண்ட அனுசரணை நாடுகளின் குழுவினால், செப்டம்பர் 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்தத் தீர்மான வரைவு,  மேலும் 22 நாடுகளின் இணை அனுசரணையுடன்,  கடந்த 1ஆம் திகதி திருத்தப்பட்ட வடிவத்தில் முன்வைக்கப்பட்டது.

அரசியலமைப்பின்படி அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கவும்,  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவும்,  மாகாணசபைகள் திறம்பட செயற்படுவதை உறுதி செய்யவும் இந்த தீர்மானம் அழைப்பு விடுக்கிறது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் முழு பங்கேற்புடன் நடத்தப்பட வேண்டும் என்று இந்த தீர்மானம் பிரதானமாக வலியுறுத்துகிறது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும்,  கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் இந்த தீர்மானம் கோருகிறது.

இந்த பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரித்தானியாவின் பிரதிநிதி, சிறிலங்காவின் உறுதிப்பாடுகளைப் பாராட்டிய அதேவேளை,  வாக்குறுதிகளை உறுதியான செயல்களாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

மனிதப் புதைகுழிகளை தோண்டி எடுப்பது, சுயாதீனமான வழக்குத்தொடுநகர் செயல்முறைகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாவலர்களைக் கண்காணிப்பதை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியம் போன்றவற்றை  அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், வாக்கெடுப்பு இல்லாமல் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் பிரித்தானிய பிரதிநிதி நம்பிக்கை தெரிவித்தார்.

அதேவேளை,  சிறிலங்காவின் மனித உரிமைகள் முன்னேற்றம் மற்றும் பொருளாதார மீட்சியைப் பாராட்டிய சீன பிரதிநிதி,  அதன் இறையாண்மை மற்றும் அரசியல் உறுதித்தன்மைக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பிரித்தானியா முன்வைத்த தீர்மானத்தை, சீனப் பிரதிநிதி எதிர்த்ததுடன், இதன் ஆணை பயனற்றது என்றும், தெரிவித்ததுடன்,  ஒருமித்த கருத்துடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும் அறிவித்தார்.

தென்கொரியா குடியரசு, ஜப்பான் ஆகியன சிறிலங்கா  அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகளை வரவேற்றதுடன், ஒருமித்த கருத்துடன் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை ஆதரித்தன.

வளைகுடா ஒத்துழைப்பு சபை உறுப்பு நாடுகள் சிறிலங்காவின் சமூக மற்றும் அரசியல் சீர்திருத்த முன்னேற்றத்தை எடுத்துரைத்து,  இறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தின.

எதியோப்பியாவும் கியூபாவும், வெளிப்புற தலையீட்டுக்கான ஆணையை எதிர்த்த துடன்,  தேசிய இறைமைக்கு மரியாதை அளிக்குமாறு வலியுறுத்தின.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வுக்கான சிறிலங்காவின்  நிரந்தரப் பிரதிநிதி உரையாற்றிய போது, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின், ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையின் ஆணையை நீடிப்பதை விமர்சித்தார்.

இது முன்னுதாரணம் இல்லாதது மற்றும் உண்மையான உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்கு எதிர்மறையானது என்றும் குபுறிப்பிட்டார்.

கடந்தகால மீறல்கள் தொடர்பான பிரச்சினைகளை உள்ளூர் பொறிமுறைகளின் மூலம் தீர்ப்பதற்கான உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தியதுடன் இந்த தீர்மானத்தை நிராகரிக்கக் கோரினார்.

இந்த விவாதத்தைத் தொடர்ந்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தலைவர் வாக்கெடுப்பு இல்லாமல் தீர்மானம்  ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *