மகிந்தவைத் தூக்கில் போட வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை தூக்கில் போட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியது மற்றும் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட – போரின் போதும் அதற்குப் பின்னரும் செய்த செயல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.
அதிபர் தேர்தலின் போது, இராணுவத் தளபதியாக இருந்த எனக்கு, விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து பசில் ராஜபக்ச தனிப்பட்ட முறையில் கூறினார்.
தொழிலதிபர் ரிரான் அலஸ் பின்னர் இதே சம்பவத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
போர் முடிவுக்கு வரும் கட்டத்தில், மகிந்த ராஜபக்ச ஏன் போர்நிறுத்தத்தை அறிவித்தார்?
அது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் தப்பி ஓட அனுமதிப்பதற்காகவா?
அத்தகைய முடிவுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். அவை தேசத்திற்கு எதிரான துரோகச் செயல்கள்.
இந்த வழக்குகளை மீண்டும் திறந்து, குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு நீதியை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.
வாய்ப்பு வழங்கப்பட்டால் நான் தீர்க்கமாக செயல்படுவேன்.
மகிந்த ராஜபக்சவின் செயல்கள் தேசத்துரோகத்திற்குச் சமம், மரண தண்டனைக்குரிய குற்றம்.
சட்டத்தின்படி, இதுபோன்ற துரோகத்திற்கான தண்டனை, தூக்கில் தொங்கவிடப்படுவதுதான்.
வேறொரு நாட்டில், மகிந்த ராஜபக்ச இதனைச் செய்திருந்தால், அவரது கழுத்தில் அல்ல, கால்களில் கட்டித் தூக்கிலிடப்படுவார்.
அரசு சொத்து துஷ்பிரயோகம் மற்றும் போர்க்கால முடிவுகள் இரண்டிலும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.