பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை கொண்டு வருவதில் சிறிலங்கா உறுதி
சிறிலங்கா பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை திருத்துவதற்கும் நல்லிணக்க வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா குழுவின் 29வது அமர்வில் சிறிலங்கா தொடர்பான விவாதம் இடம்பெற்றது.
இதில் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றிய போதே அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இதனைக் குறிப்பிட்டார்.
அனுர குமார திசாநாயக்க தலைமையிலான நிர்வாகம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து, சர்வதேச தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுடன் இணக்கமான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால் அதை மாற்றுவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தற்போது இதற்கான சட்ட வரைவை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அரசாங்கம் மிக விரைவில் புதிய சட்டத்தை தாக்கல் செய்ய எதிர்பார்க்கிறது.
நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு இணையான நடவடிக்கையாக, நீண்டகால வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக காணாமல் போனோர் அலுவலகத்திற்கு கூடுதலாக 375 மில்லியன் ரூபா நிதியை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
காணாமல் போன 23 பேரை இந்தப் பணியகம் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதுடன், காணாமல் போனதற்கான சான்றிதழ்களை வழங்கி, இழப்பீட்டு பணியகத்துக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அரசாங்கம் இழப்பீட்டு பணியகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பணியகம் உள்ளிட்ட உள்நாட்டு நல்லிணக்க பொறிமுறைகளின் சுதந்திரத்தை உறுதி செய்வதன் மூலமும் தேவையான வளங்களை ஒதுக்குவதன் மூலமும் வலுப்படுத்துகிறது.
இந்த சீர்திருத்தங்கள், மோதலுக்குப் பிந்தைய, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான நிர்வாகத்தின் பரந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.