சிறிலங்காவுடனான சீனாவின் நட்புறவு ஆழமாக வேரூன்றி செழித்து வருகிறது
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் சிறிலங்காவுடனான சீனாவின் நட்புறவு ஆழமாக வேரூன்றி செழித்து வருகிறது என்று சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் கீ சென ஹோங் தெரிவித்துள்ளார்.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 76வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வியாழக்கிழமை இரவு கொழும்பில் உள்ள விடுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த ஆண்டின் தொடக்கத்தில், சிறிலங்கா அரச தலைவர் அனுரகுமார திசாநாயக்க சீனாவிற்கு வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டார்.
எமது இரு தலைவர்களும் முக்கியமான முடிவுகளை எட்டினர். இது எமது இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு புதிய மூலோபாய வழிகாட்டுதலை வழங்கியது.
சவால்கள் இருந்தபோதிலும், இரு நாடுகளும் பகிரப்பட்ட அபிலாசைகளால் பிணைக்கப்பட்ட பங்காளிகளாக உள்ளன.
பரஸ்பர செழிப்பு, அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக சிறிலங்காவுடன் சீனா தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர்களான மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர்களா கரு ஜெயசூரிய, மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, சிறிலங்காவிற்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தது இராஜதந்திரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.