சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை
ஜெனிவாவில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் சிறிலங்கா பொறுப்புக்கூறல் செயற்திட்டம் மற்றும் வெளிப்புற விசாரணை பொறிமுறை என்பனவற்றை எதிர்க்கின்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
“நாட்டில் கடந்த கால குற்றங்கள் குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக, தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் மூலம் தொழில்நுட்ப உதவியைப் பெற சிறிலங்கா தயாராக இருக்கிறது.
நாட்டின் பல பகுதிகளில் தோண்டி எடுக்கப்படும் மனித புதைகுழிகளில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுவதும், இத்தகைய ஒத்துழைப்பில் அடங்கும்.
இந்த உதவியைப் பெறுவது, மனித புதைகுழிகள் தோண்டி எடுக்கப்படும் நீதித்துறை அதிகாரிகளின் உத்தரவுகளைப் பொறுத்த விடயமாகும்.
சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மான வரைவு மீதான வாக்கெடுப்புக்கு திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை, ஆனால் வரைவுத் தீர்மானத்தில் திருத்தங்கள் வரும் 25 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வரைவுத் தீர்மானத்தில் பெரிய திருத்தங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.
இதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிறிலங்கா ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பில் இருக்கும்.
இதுபற்றி ஜெனீவாவில் பிரித்தானிய மற்றும் கனடிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன்.
நீதி வழங்க உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு கூடுதல் அவகாசம் கோரினேன்.
சிறிலங்காவில் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் ஆணை நீடிக்கப்படுவதால், அதன், சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்தின் காலமும் நீடிக்கப்படும்.
எனினும், சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் உட்பட வெளிப்புற விசாரணை பொறிமுறையை நாங்கள் எதிர்க்கின்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த ஆண்டுக்குள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும்.
அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு இறுதி கட்டத்தில் இருக்கிறது.
இந்த ஆண்டு நாம் அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும், என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.