போருக்குப் பின் சிறிலங்கா வந்த 700க்கும் அதிகமான வெளிநாட்டு போர்க்கப்பல்கள்
போர் முடிவுக்கு வந்த பின்னர் வெளிநாடுகளின் 700இற்கும் மேற்பட்ட கடற்படைக் கப்பல்கள் சிறிலங்காவுக்கு வந்து சென்றிருப்பதாக, சிறிலங்கா கடற்படையின் வட பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார்.
காலி கலந்துரையாடல்-2025 தொடர்பாக, விளக்கமளிக்க நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்காவின் மூலோபாய முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2025 ஆம் ஆண்டில் மட்டும் 26 வெளிநாட்டு கடற்படைக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளன.
போர் முடிவடைந்த பின்னர், கொழும்பு, திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை உள்ளிட்ட சிறிலங்கா துறைமுகங்களுக்கு 700க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் வருகை தந்துள்ளன.
இது உலகளாவிய கடற்படை இராஜதந்திரத்தில், அதிகரித்து வரும் சிறிலங்காவின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகிறது.
சிறிலங்காவின் புவியியல் அமைவிடம், பிராந்திய மற்றும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்கு இன்றியமையாத, பாதுகாப்பான மற்றும் நியாயமான கடல்சார் வர்த்தக பாதைகளுக்கு ஒரு சிறந்த நுழைவாயிலாக உள்ளது.
சிறிலங்காவின் பரந்த கடல்பரப்பை பாதுகாப்பதில் சவால்கள் உள்ளன.
கப்பல் போக்குவரத்து, சட்டவிரோத மீன்பிடி மற்றும் மாசுபாட்டைக் கண்காணிக்க சக்திவாய்ந்த பிராந்திய கடற்படைகளின் ஆதரவு அவசியம்.
சிறிலங்காவிற்கு தெற்கே தினமும் 150க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடந்து செல்கின்றன.
மேலும் ஆண்டுதோறும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் பயணிக்கின்றன. எனவே, கடல்சார் கள விழிப்புணர்வு மிக முக்கியமானது.
பயனுள்ள கடல்சார் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்.
இந்தியப் பெருங்கடலில் அமைதி, உறுதித்தன்மை மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கான சிறந்த தளமாக காலி கலந்துரையாடரல் இருக்கும் என்றும் றியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார்.