மேலும்

செம்மணியில் சிக்கப் போகும் பிரபலங்கள்

மாணவி கிருசாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனது மனைவி ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

கடந்த ஜூலை 10 ஆம் திகதி அவர் தனது மனைவி ஊடாக, ஜனாதிபதிக்கு முதலாவது கடிதத்தை அனுப்பியிருந்தார்.

சுமார் இரண்டு மாதமாகின்ற நிலையில்,  பதிலேதும் கிடைக்காத நிலையில், இரண்டாவது கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

முதலாவது கடிதத்தில், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாக,  சர்வதேச விசாரணையில், விரிவான தகவல்களுடன் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாகவும், அவ்வாறான ஒரு விசாரணையை ஏற்படுத்துமாறும் கேட்டிருந்தார்.

சோமரத்ன ராஜபக்ச திமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர்.

கால் நூற்றாண்டுக்கு மேலாக சிறையில் உள்ள அவர், இந்த வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டதாக கூறுகிறார்.

இராணுவ உயரதிகாரிகளின் உத்தரவுகளை நிறைவேற்றியதற்காகவே, தன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக,  அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை, இப்போதும் அவர் அதற்கு தயாராக இல்லை.

அவர் உண்மையிலேயே குற்றம் செய்யாமல் மேலதிகாரிகளால் சிக்க வைக்கப்பட்டாரா? அல்லது அவர் குற்றத்தை ஒப்புக் கொள்கின்ற நிலைக்கு இன்னமும் வரவில்லையா,?என்ற கேள்வி நீடிக்கிறது.

அது ஒரு பக்கம்  இருக்க, சோமரத்ன ராஜபக்ச செம்மணியில் மாத்திரமன்றி, மணியம்தோட்டம் பகுதியிலும் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.

அவர்களைக் கொன்ற மேலதிகாரிகளின் விவரங்களை வெளியிட தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் ஜனாதிபதியோ அரசாங்கமோ, சோமரத்ன ராஜபக்சவின் சாட்சியங்கள் அல்லது அவர் வழங்க முன்வருகின்ற தகவல்களின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.  அது ஏன் என்றும் தெரியவில்லை.

இரண்டாவது கடிதத்தில் அவர் மனிதப் புதைகுழிகள் பற்றிய  மற்றும் படுகொலைகளுக்கு காரணமான அதிகாரிகள் பற்றிய தகவல்களை ஊடகங்களுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் வழங்கப் போவதாக கூறியிருக்கிறார்.

அவர் இதனை வைத்து ஒரு பேரத்தை பேச முனைகிறாரோ என்ற கேள்வி எழுகிறது.

ஏனென்றால், இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு,  அவர் தன்னைக் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்க முயற்சிக்கக் கூடும்.

அல்லது  தப்பித்துக் கொண்ட  குற்றவாளிகளை அடையாளப்படுத்துவதன் மூலம், அவர் தனது ஆதங்கத்தை தீர்த்துக் கொள்ளவும் முயற்சிக்கலாம்.

மேலதிகாரிகள் உத்தரவிட்டதன் அடிப்படையில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு தாங்கள் பொறுப்புக்கூற வேண்டியிருக்கிறது – தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்ற ஆதங்கமும் ஆத்திரமும் அவருக்குள் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏனென்றால் கிருசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்னரே, சோமரத்ன ராஜபக்ச செம்மணியில் 300 தொடக்கம்  400 பேர் வரை கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக,  தகவலை வெளியிட்டிருந்தார்.

அதற்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்ற விசாரணையில் இருந்த போதும் கூட, இந்த தகவல்களை வெளியிட்டிருக்கவில்லை.

அதேவேளை, மரணதண்டனைத் தீர்ப்பிற்குப் பின்னர், அவர் வெளியிட்ட தகவல்கள் புறக்கணிக்கத்தக்கவை அல்ல.

ஏனென்றால் அவரும், அவருடன் சேர்த்து மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏனைய நான்கு இராணுவத்தினரும், செம்மணியில் 27 மனிதப் புதைகுழிகளை அடையாளம் காட்டியிருந்தனர்.

அவ்வாறு அடையாளம் காட்டப்பட்ட புதைகுழிகளில்  இருந்து 15 மனித எலும்புக்கூடுகள், மீட்கப்பட்டிருந்தன.

எனவே, சோமரத்ன ராஜபக்ச உண்மைக்கு புறம்பான தகவல்களை கூற முற்படுகிறார், விவகாரத்தை திசை திருப்புகிறார் என்ற முடிவுக்கு வர முடியாது.

செம்மணிப் புதைகுழிகளில் அவருக்கு எந்தளவுக்குத் தொடர்புகள் இருந்தனவோ இல்லையோ, அந்தப் புதைகுழிகள் பற்றிய பல தகவல்கள் தெரிந்திருக்கின்றன.

அவற்றையே அவர் வெளிப்படுத்த முனைந்திருக்கிறார். முன்னர், அவர் அடையாளம் காண்பித்த இடங்களில் எல்லாம், அல்லது அவர் கூறியபடி மனித எலும்புக்கூடுகள் இருந்திருக்கவில்லை.

அவர் 14 மனிதப் புதைகுழிகளை அடையாளம் காட்டியிருந்தார், அவற்றில் 59 தொடக்கம் 67 சடலங்கள் வரை புதைக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

ஆனால் 1999 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது, அவர் அடையாளம் காட்டிய இடங்களில் நான்கு சடலங்கள் மாத்திரமே மீட்கப்பட்டன.

டிஎம்.ஜெயசிங்க என்ற மரணதண்டனை விதிக்கப்பட்ட இன்னொரு இராணுவ சிப்பாய்  நான்கு இடங்களை அடையாளம் காட்டி, 11 சடலங்கள் அவற்றில் புதைக்கப்பட்டதாக கூறிய போதும்,  எந்த ஒரு சடலமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பிரியதர்சன பெரேரா என்ற மற்றொரு மரண தண்டனைக் கைதி ஐந்து புதைகுழிகளில் 16 தொடக்கம் 17 சடலங்கள் புதைக்கப்பட்டதாக அடையாளம் காட்டிய போதும், நான்கு சடலங்கள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டன.

பிரதீப் பிரியதர்சன என்ற மற்றொரு மரண தண்டனை கைதி,  இரண்டு இடங்களை அடையாளம் காட்டி மூன்று சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்த போதும் இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதுபோல இரண்டு இடங்களில் 7 சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக டி.எம். ஜெயதிலக என்று இன்னொரு மரணதண்டனைக் கைதி கூறியிருந்த போதும் இரண்டு சடலங்கள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டன.

செம்மணியில், முதலாவது அகழ்வு, 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றது.

அப்பொழுது இரண்டு பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அவை அடையாளமும் காணப்பட்டன.

அதன் பின்னர்,  சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னரே அடுத்த கட்ட அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது அடையாளம் காட்டப்பட்ட பல இடங்களில் சடலங்கள் இருக்கவில்லை. அவை அகற்றப்பட்டிருக்கலாம். வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என மனித உரிமை அமைப்புகள் சந்தேகித்திருந்தன.

சோமரத்ன ராஜபக்ச தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவோ அல்லது இந்த வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என்பதற்காகவோ இந்த தகவல்களை வெளியிட முனைந்தார் என்று கருத இடமில்லை.

அவருக்கு தப்பிக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்தும் எண்ணம் இருந்திருந்தாலும், அவர் தற்போது கூற வந்திருக்கின்ற தகவல்கள், உண்மைக்கு புறம்பானவையோ அல்லது வேறு தரப்பினரை பழி தீர்க்கும் நோக்கம் கொண்டவை என்றோ, முற்றுமுழுதாக எடுத்துக் கொள்ள முடியாது.

அரசாங்கம் ஏற்கனவே இந்த விடயத்தில் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருக்கிறது.

அதேவேளை, செம்மணி பகுதியில் பலர் கொன்று புதைக்கப்பட்டதற்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளின் பட்டியலை வெளியிட போவதாக சோமரத்ன ராஜபக்ச கூறியிருப்பது பல அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கலாம்.

ஏற்கனவே, சோமரத்ன ராஜபக்ச சில அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்டிருந்தார். அவர்களில் கப்டன் லலித் ஹேவ, கப்டன் பெரேரா உள்ளிட்டவர்கள் அடங்கி இருந்தனர்.

ஆனாலும், அந்த மனிதப் புதைகுழி விடயத்தில் அவர்களைத் தாண்டி உயர் அதிகாரிகளும் தொடர்புபட்டிருக்கிறார்கள்.

அவர்கள் யார் என்ற விவரங்கள் வெளிவரவில்லை. அல்லது வெளிவர விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த விபரங்களை சோமரத்ன ராஜபக்ச வெளியிட்டால், பலருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

சோமரத்ன ராஜபக்ச வழங்கிய தகவல்களின்படி, செம்மணி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், 1996 ஆம் ஆண்டு இராணுவத்தின்  7ஆவது இலகு காலாட்படை பற்றாலியனே நிலை கொண்டிருந்திருக்கிறது.

அதன் தலைமையகத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்கள் கொண்டு வந்து புதைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அப்பொழுது  7வது இலகு காலாட்படை பட்டாலியனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர், மேஜர் கே .ஏ. டி. ஏ கருணாசேகர.

இவர் 1994 பெப்ரவரி 15ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 05ஆம் திகதி வரை இந்தப் படை பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்திருக்கிறார்.

கே.ஏ.டி.ஏ.கருணாசேகர வேறு யாருமல்ல. முன்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவே தான்.

51 ஆவது இராணுவத் தலைமை அதிகாரியாக, இராணுவ செயலாளராக, 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகவும் இருந்தவர்.

2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசின் காலத்தில் இவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது பல மீறல்களுடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை குறித்தும் இவர் விசாரிக்கப்பட்டார்.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட  சம்பவம் தொடர்பாகவும் இவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அதுமாத்திரமன்றி, 2004 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் முதலாவது அணி, ஹெய்டியில்  அமைதி காப்பு பணிக்கு சென்ற போது, அதற்கு தலைமை தாங்கியவரும் இவரே.

ஹெய்டியில், நிலை கொண்டிருந்த இலங்கை படையினர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, பெரியளவில் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அங்கிருந்த இலங்கைப் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவர்கள் மீது சரியான விசாரணைகளோ நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை.

இப்படி இலங்கை இராணுவத்தில் இருந்த காலகட்டத்தில் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் கீழ் இருந்த படைப்பிரிவுகளில் ஒழுங்கீனங்களும் பிரச்சினைகளும் குழப்பங்களும் இருந்தமை தெளிவு.

இவ்வாறான நிலையில் செம்மணிப் புதைகுழிகள் உருவாகிய காலகட்டத்தில் அந்தப் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த, அவருக்கு அதில் இருந்த பங்கு என்ன, அவரின் கீழ் இருந்த இராணுவத்தினர் செய்த கொலைகளுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாரா, அவர் மீது துறைசார் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா, என்பன போன்ற கேள்விகள் நீடிக்கின்றன.

செம்மணிப்  புதைகுழி விவகாரம் இந்தளவுக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ள போதும், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின்  பெயர் இன்னமும் வெளிவராமல், இருப்பது ஏன்?

அவர் அல்லது அவருக்கு மேல் இருந்த அதிகாரிகளின் பெயர்கள், எந்த ஒரு ஆவணங்களிலும் இடம் பெறாமல் மறைக்கப்பட்டதா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை, சோமரத்ன ராஜபக்சவிடம், தேடும் போது இன்னும் பல இரகசியங்கள் வெளிவரக் கூடும்.

-சுபத்ரா
வழிமூலம்- வீரகேசரி வாரவெளியீடு (14.09.2025)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *