எந்தவொரு வெளியகப் பொறிமுறைகளையும் ஏற்க முடியாது- சிறிலங்கா அறிவிப்பு
நாட்டில் பிளவுகளை உருவாக்கி, தேசிய நல்லிணக்க செயல்முறையை சிக்கலாக்கும், சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் போன்ற எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும், நிராகரிப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பெரவையின், 60வது அமர்வில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஆண்டிற்கும் குறைவான காலத்திற்குள் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, உள்நாட்டு செயல்முறைகள் மூலம், அனைத்து இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், அரசாங்கத்தின் உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் உறுதியை தெளிவாகக் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு சட்ட கட்டமைப்பிற்கு ஏற்ப மக்களின் பன்முகத்தன்மையை மதிக்கும் மற்றும் கொண்டாடும் ஒரு நாட்டை நோக்கிச் செயற்பட நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்த, பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதிகளில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உதவி மூலம் சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும்.
குறுகிய காலத்திற்குள் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கவனத்தில் கொள்ளுமாறு பேரவையை வலியுறுத்துகிறோம்.
தேசிய செயல்முறைகள் மூலம் இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கு இந்த வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்துவதற்குத் தேவையான நேரத்தையும் இடத்தையும் வழங்குவதற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை நாடுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.