2000க்கு முன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து புதிய விசாரணை
2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கிலும் தெற்கிலும் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட 10,000 க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து மீண்டும் விசாரணைகள் தொடங்கப்படும் என்று, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நாளை முன்னிட்டு அலரி மாளிகையில், காணாமல் போனவர்கள் தொடர்பான பணியகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோருக்கான பணியகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகத்தின் செயற்பாடுகளை வலுப்படுத்த புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த முயற்சிக்கு ஏற்கனவே அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த செயல்முறைக்கு 375 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகள் என்பன தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையில் மையமாக இருக்கும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
