செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வின் 37ஆம் நாள் அகழ்வுப் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, புதிதாக 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.
அவற்றில், 177 மற்றும் 178ஆம் இலக்கமிடப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாக காணப்படுகிறது.
அத்துடன் தடயப் பொருளாக உடைந்த காப்பு ஒன்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று 10 மனித எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
