முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
சிறிலங்காவில் முன்னர் சுகாதார மற்றும் கடற்றொழில் அமைச்சர் பதவிகளை வகித்த, ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோதற மீன்பிடித் துறைமுகத்தை ஆழப்படுத்தும் ஒப்பந்தத்தை குறைந்த விலைக்கு வழங்கிய குற்றச்சாட்டுத் தொடர்பாக, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் விசாரணை செய்ய முயன்ற போது அவர் தலைமறைவானார்.
இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள், பெற்றுக் கொண்டனர்.
இதுவரை தரைமறைவாக இருந்து வந்த ராஜித சேனாரத்ன, தன்னை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.
எனினும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
இன்று காலை அவர், கொழும்பு மேல்நீதிமன்றில் முன்னிலையாகிய நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், ராஜித சேனாரத்னவை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்துமாறும், அதுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
