மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீது தொடர்ந்து அடக்குமுறை

சிறிலங்காவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்  உறவுகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக் குழு விசனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர், எதிர்வரும் செப்ரெம்பர்  8 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரின் 3 ஆவது பக்க நிகழ்வுக்காக, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா உள்ளடங்கலாக உலக நாடுகள் பலவற்றில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் விவகாரத்தின் மோசமான நிலவரம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும், கரிசனைகளை வெளிப்படுத்தியும் தமக்குக் கடிதங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்து கொள்வதற்காக இயங்கிவரும் உறவுகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டுவருவதாகத் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த தமது கரிசனையை சிறிலங்கா அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தியிருப்பதாகவும், நாட்டில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பணியாற்றிவரும் ஏனைய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் குறித்துத் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *