இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை தடுக்க நடவடிக்கை
இன அல்லது மத நோக்கங்களுடன் அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்சிப் பதிவு குறித்த வர்த்தமானி அறிவிப்புகள், இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் கட்சிகளைப் பதிவு செய்வதைத் தெளிவாகத் தடைசெய்கின்றன என்று, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் போது, அவை அத்தகைய அடிப்படையில் உருவாக்கப்படுகின்றனவா என்பதை நாங்கள் சரிபார்க்கிறோம்.
சந்தேகம் இருந்தால் என்ன செய்ய முடியும் என்பதை தொடர்புடைய சட்ட விதிகள் கூறுகின்றன. அவற்றின்படி நாங்கள் செயல்படுகிறோம்.
விண்ணப்பதாரர்கள் தேர்தல் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் மூன்று நேர்காணல்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அதன் போது அவர்களின் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் தொலைநோக்கு உட்பட அனைத்து அம்சங்களிலும் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
அவர்கள் பல்வேறு வகையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தச் செயல்பாட்டின் போது, ஒரு கட்சி இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் பதிவு செய்ய முயற்சிப்பதாக நாங்கள் உணர்ந்தால், அதைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.
