ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணை
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சிறிலங்கா அதிபராகப் பதவியில் இருந்த போது, 16.6 மில்லியன் ரூபா பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் ரணில் விக்ரசிங்க கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அவர் இன்று வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
எனினும் ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலை இன்று அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதற்கு தடையாக இருக்கலாம் என்று கொழும்பு தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவக் குழு, அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை பெற வேண்டும் என்று தீர்மானித்துள்ளது என்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.
“அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழு நேற்று மாலை மருத்துவமனை கேட்போர் கூடத்தில் ஒரு கலந்துரையாடலை நடத்தியது, கலந்துரையாடலுக்குப் பின்னர், அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை இந்த பரிந்துரையை செய்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, முன்னாள் அதிபர் ரணில் திருப்தி அடையும் அளவுக்கு குணமடையவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சிறப்பு மருத்துவக் குழு பரிந்துரைத்திருந்தால், அந்தப் பரிந்துரைகளுக்கு மாறாக எதுவும் செய்ய முடியாது என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
