ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிபராகப் பதவியில் இருந்த போது, அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தி லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை முன்னெடுத்து வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ரணில் விக்ரமசிங்கவை வாக்குமூலம் அளிப்பதற்கு வருமாறு இன்று அழைப்பு விடுத்திருந்தனர்.
இதற்கமைய இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகிய ரணில் விக்ரமசிங்கவை, விசாரணைக்குப் பின்னர் இன்று பிற்பகல் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் இன்று மாலை கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்குமாறு அவரது தரப்பில் முன்னிலையான சட்டவாளர் அனுஜ பிரேமரத்ன கோரிக்கை விடுத்தார்.
எனினும், சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான அரச சட்டவாளர் திலீப பீரிஸ், பிணையில் விடுவிப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிவான், பிணைக் கோரிக்கை தொடர்பான கட்டளையை 30 நிமிடங்களின் பின்னர் அறிவிப்பதாக கூறி நீதிமன்ற அமர்வை ஒத்திவைத்துள்ளார்.
சிறிலங்காவின் வரலாற்றில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து கோட்டே நீதிமன்ற வளாகத்தில் பெருமளவிலான ஆதரவாளர்கள் குழுமியதால் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இதனால் பதற்றமான நிலை காணப்படுகிறது.






