சர்வதேசத்திடம் கற்றுக் கொண்டு நீதியை வழங்குங்கள்
சர்வதேச சமூகத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக, அதிலிருந்து கற்றுக்கொண்டு மக்களுக்கு நீதி வழங்குங்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நேற்று நடத்திய ஊடகச் சந்திப்பில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு உறுப்பினர் மகேஷ் சேனநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்திற்கு முன்னதாக, சிறிலங்கா குறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையை அரசாங்கம் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும்.
அத்தகைய அறிக்கைகள் மனித உரிமைகள் தொடர்பான நியாயமான கவலைகளைப் பற்றி குறிப்பிட்டால், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற அறிக்கைகள் நியாயமான மனித உரிமை மீறல்களைக் காட்டினால், சிறிலங்கா குடிமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் சிறிலங்கா மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், அரசாங்கம் அத்தகைய கவலைகளை திறந்த மனதுடன் ஆராய்ந்து இலங்கையர்களின் மனித உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அறிக்கைகள் நாட்டின் குடிமக்களுக்கு எதிராக அநீதி நடப்பதைக் காட்டுகின்றன.
இதுபோன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டுவது ஒரு நேர்மறையான முன்னேற்றம்.
தற்போதைய அரசாங்கம் குடிமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் தோல்வியடைந்தால், குறைந்தபட்சம் சர்வதேச சமூகமாவது அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
நாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாக்க எந்த வகையான உதவியையும் வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.
சர்வதேச சமூகத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக, அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைக் கற்றுக்கொண்டு மக்களுக்கு நீதி வழங்குங்கள், என்றும் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
