மணியந்தோட்டத்திலும் மனிதப் புதைகுழிகள் – சோமரத்ன ராஜபக்ச தகவல்
அரியாலை – மணியம்தோட்டம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பலர் புதைக்கப்பட்டுள்ளதாக, கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ள சோமரத்ன ராஜபக்ச, சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், செம்மணிப் புதைகுழிகள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த தயார் என சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார்.
இதுபற்றி கொழும்பு தமிழ் ஊடகத்திற்கு மேலும் வெளிப்படுத்தியுள்ள அவர்,
1998 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில், செம்மணி மனிதப்படுகொலை தொடர்பாக வெளிப்படுத்திய போது, அது நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இருப்பினும் கடவுளும், இயற்கையும் அவை உண்மை என்பதை நிரூபித்துள்ளன.
998 ஆம் ஆண்டு எனக்கு மரணதண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டதன் பின்னர், எனது கூற்று தொடர்பாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஊடாக, சிறைச்சாலை அதிகாரியான நாமல் பண்டார மூலம் எனக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதம் அமைச்சராலேயே எழுதப்பட்டிருந்தது. மேல்நீதிமன்றத்தில் நான் கூறிய விடயம் கோபத்தில் கூறப்பட்டது எனவும், அதனை விலக்கிக் கொள்ளுமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நான் அந்தக் கடிதத்தை வாசித்த பின்னர், சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அதனைக் கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டபோது, அந்த அதிகாரி, கடிதத்தை திருப்பி தருமாறு கூறினார்.
அந்தக் கடிதத்தைத் திருப்பிக் கொடுக்க மறுத்தபோது, அவர் உள்ளிட்ட அதிகாரிகள் என்னை மிலேச்சத்தனமாகத் தாக்கிக் கொல்ல முற்பட்டனர்.
ஏனைய சிறைக்கைதிகளின் தலையீட்டால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
அந்த அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்த போதிலும், அதற்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை.
1999 ஆம் ஆண்டு குமார் பொன்னம்பலம், போகம்பரை சிறைச்சாலையில் சந்தித்த போது, கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி சிறிலங்கா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களை அவரிடம் கூறினேன்.
அப்போது அவர் ‘பயப்படாமல் இருங்கள். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று உங்களை செம்மணி வழக்கின் சாட்சியாளராக மாற்றுகிறேன்’ எனக் குறிப்பிட்டார்.
1999 ஆம் ஆண்டு செம்மணி மனிதப்புதைகுழியைக் காண்பிப்பதற்காகச் சென்றபோது, எனது சார்பில் முன்னிலையாவதற்காக குமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு விமான வசதி வழங்கப்படவில்லை.
அதன் பின்னர் அவர் திடீரெனப் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது மறைவை அடுத்து அப்போதைய அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவினால் அனுப்பிவைக்கப்பட்ட இரங்கல் செய்தியில், குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்ட தினத்துக்கு முன்னைய தினத்துக்குரிய திகதியே இடப்பட்டிருந்தது.
இதன்மூலம் குமார் பொன்னம்பலம் கொல்லப்படுவதற்கு முன்னரே சிறிலங்கா அதிபர் அந்த இரங்கல் செய்தியை எழுதியிருந்தார் என்பது தெளிவாகிறது.
1999 ஆம் ஆண்டு நான் மனிதப் புதைகுழிகள் உள்ள இடங்களைக் காட்டிக்கொடுத்த வேளையில், அவற்றைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் எனவும், சிறிலங்கா அதிபர் எனக்கு மன்னிப்பு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனால், சிலவற்றை மாத்திரம் காட்டிக்கொடுத்து விட்டு, அதனைக் கைவிட்டு விட்டேன்.
இதுதொடர்பில் மேலதிகமாக பல விடயங்கள் சிறிலங்கா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் செம்மணி மாத்திரமன்றி, டிவிசன் தலைமையகம் முதல் 1996 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த இராணுவ முகாம்களில், சித்திரவதைக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதனை, அன்றைய பாதுகாப்புச் செயலாளர் தொடக்கம் சந்திரிகா வரை அறிந்திருந்தனர்.
அரியாலை 7வது இலகு காலாட்படையினால் செம்மணி முதல் துண்டி முகாம் வரை, சகல சோதனைச் சாவடிகளிலும் மக்கள் கைது செய்யப்பட்டனர்.
7வது இலகு காலாட்படையின் சி 3 முகாமின் சித்திரவதைக் கூடங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மணியம்தோட்டம் பிரதேசத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டன.
அது இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருந்த பிரதேசமாகும். அவ்வாறு சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் எனக்கு சரியாகத் தெரியாவிட்டாலும், அந்தப் பிரதேசம்எனக்கு நன்றாகத் தெரியும்.
இதற்கு மேலதிகமாக பிரதான கைதுகள், செம்மணியில் இடம்பெற்றன.
அங்கு கைது செய்யப்பட முடியாதவர்கள் ஏனைய சோதனைச்சாவடிகளில் கைது செய்யப்பட்டனர் என்றும் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
