நாளைய முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக சிறிலங்கா அரசு தீவிர பரப்புரை
சிறிலங்கா அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் இலக்காக கொண்ட, திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான பிரச்சாரங்களால், வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு சிறிலங்கா இராணுவ முகாமுக்குச் சென்ற எதிர்மனசிங்கம் கபில்ராஜ் என்ற இளைஞன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து,இலங்கை தமிழ் அரசுக் கட்சியினால் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சில அரசியல் குழுக்கள் உண்மைகளைத் திரிபுபடுத்தி, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது.
எனவே, நாட்டு மக்கள் உண்மைகளைப் புரிந்து கொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கிளிநொச்சியில் இன்று நடத்திய ஊடகச் சந்திப்பில், கருத்து வெளியிட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
முத்தையன்கட்டு சம்பவத்திற்குப் பின்னர் என்னென்ன சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமோ அவை அனைத்தும் நீதியான முறையில் இடம்பெற்று வருகிறது.
இந்த முழுஅடைப்பு, அரசியல் தரப்பினர் இழந்துபோன தங்களின் வாக்கு வங்கியை அதிகரிக்கவே மேற்கொள்கின்றனர்.
இந்த முழு அடைப்பு என்பது தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் மாற தயாரில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது, தமிழ் மக்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இவ்வாறான போராட்டங்கள் தேவைப்படுகின்றன.
கடந்த காலங்களில் நாட்டில் இராணுவ ஆட்சி போன்ற ஆட்சி நிலைமை காணப்பட்டது. இப்போது அப்படியல்ல.
முத்தையன்கட்டு சம்பவம் கூட, தமிழ் இளைஞன் என்ற காரணத்திற்காக இடம்பெற்றது அல்ல. இது நாட்டில் ஏனைய பிரதேசங்களில் இடம்பெறும் சம்பவங்கள் போன்றது.
இந்த முழுஅடைப்பை வர்த்தகர்களும் பெரும்பாலான தமிழ் மக்களும் நிராகரித்துள்ளனர்.
ஆனாலும் சில வர்த்தகர்கள் தங்களின் சங்கங்கள் எடுக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்பட வேண்டியவர்களாக உள்ளனர் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ள நாளைய முழு அடைப்பு போராட்டத்திற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
