அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களால் ஆபத்து இல்லை என்கிறது காவல்துறை
அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவது ஆபத்தானது என விடுக்கப்படும் எச்சரிக்கைகளை சிறிலங்கா காவல்துறை நிராகரித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் எவ்.யூ .வூட்லர்,
எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத – எந்தவொரு வெளிநாட்டினரும், சட்டத்தை மீறாவிட்டால், அவர்களை கவலையாகக் கருதக்கூடாது.
சிறிலங்கா அனைத்து சுற்றுலாப் பயணிகளையும், தேசிய இனத்தைப் பொருட்படுத்தாமல் வரவேற்கிறது.
எமது நாடு ஒரு விரும்பத்தக்க இடமாக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும்.
அறுகம் குடா அல்லது வேறு எந்தப் பகுதியாக இருந்தாலும், சிறிலங்காவை தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டுப் பயணிகள் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு நேர்மறையான அறிகுறியாகக் கருதப்பட வேண்டும்.
அறுகம் குடாவில் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
சிறிலங்காவுக்கு வரும் இஸ்ரேலியர்கள், பலஸ்தீனியர்கள் அல்லது வேறு எந்த நாட்டினரும் எமது நாட்டின் அழகை அனுபவிக்கட்டும்.
வெளிநாட்டினர் வருகை தருகிறார்கள் என்றால், அது இலங்கையின் முன்னேற்றத்திற்கானது.
இது ஏன் ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை.
அதே நேரத்தில், காவல்துறை மற்றும் ஆயுதப்படைகள் உள்ளிட்ட சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகள் எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்தும் விழிப்புடன் இருக்கும்.
ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் விரைவாகச் செயற்படும்.
காவல்துறை, முப்படைகள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் விடயங்களைக் கண்காணித்து வருகின்றனர்.
பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் அவர்கள் செயற்படுவார்கள்,” என்றும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் மேலும் கூறினார்.