தெஹ்ரானில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றம்
ஈரானில் உள்ள சிறிலங்கா தூதரகம் தற்காலிகமாக கைவிடப்பட்டு, அங்கிருந்த அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் மோதல் மற்றும் இலங்கையர்கள் மீதான அதன் தாக்கம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் அவர் சிறப்பு அறிக்கையை வெளியிட்டார்.
தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக, சிறிலங்கா தூதரகம், தெஹ்ரானில் இருந்து தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள நிலைமைகள் காரணமாக தூதரக அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும் அனைத்து தொடர்பு இலக்கங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
தூதரக பணியாளர்களைத் தவிர, தெஹ்ரானில் உள்ள தூதரகத்தில் இருந்த எட்டு சிறிலங்கா மாணவர்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஈரானின் வடக்குப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூதரக வளாகத்திற்கு அருகாமையில் தாக்குதல்கள் நடந்ததால், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஈரானில் சுமார் 35 இலங்கையர்கள் தங்கியிருக்கின்றனர். தெஹ்ரானில் வசிப்பவர்கள் தற்போது அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.
அதேவேளை இஸ்ரேலில் கிட்டத்தட்ட 20,000 இலங்கையர்கள் இருக்கின்றனர்.
இஸ்ரேலில் இன்றுவரை, மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் என நான்கு இலங்கையர்கள் தாக்குதல்களில் காயமடைந்துள்ளனர் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.