வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபையை கைப்பற்றிய தமிழ் அரசு கட்சி
வடமராட்சி தெற்குமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பதவியை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இன்று பிற்பகல் தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவதந்தினி பாபு தலைமையில் இடம்பெற்றது.
இதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி குமாரசாமி சுரேந்திரனையும், தமிழ் தேசிய பேரவை தம்பையா சிவராசாவையும், தவிசாளர் பதவிக்கு முன்மொழிந்தன.
இதையடுத்து நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், தமிழரசுக் கட்சியை சேர்ந்த குமாரசாமி சுரேந்திரன் 13 வாக்குகள் பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
தம்பையா சிவராசாவுக்கு 12 வாக்குகள் கிடைத்திருந்தன.
அதையடுத்து பிரதி தவிசாளர் பதவிக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 14 வாக்குகளைப் பெற்று தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த தயாபரன் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
32 உறுப்பினர்களைக் கொண்ட வடமராட்சி தெற்குமேற்கு பிரதேச சபையில், தமிழ் அரசுக் கட்சிக்கு 13 உறுப்பினர்களும், தமிழ் தேசிய பேரவைக்கு 7 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்திக்கு 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு 4 உறுப்பினர்களும், ஈபிடிபிக்கு 2 உறுப்பினர்களும் உள்ளனர்.
இவர்களில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
அதேவேளை, தமிழரசுக் கட்சிக்கு ஈபிடிபி ஆதரவு தெரிவித்திருந்த போதும், தவிசாளர் தெரிவின் போது, 13 வாக்குகளே கிடைத்திருந்தன.
அதேவேளை தமிழ்த் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு 11 உறுப்பினர்கள் இருந்த போதும் தவிசாளர் தெரிவில், இந்தக் கூட்டணிக்கு 12 வாக்குகள் கிடைத்திருந்தன.
இதனால் தமிழ் அரசு- ஈபிடிபி கூட்டணியில் ஒருவர் வாக்களிக்காமல் தவிர்த்துள்ளதும் ஒருவர் தமிழ் தேசிய பேரவை வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
எனினும் பிரதி தவிசாளர் தெரிவு பகிரங்கமாக இடம்பெற்ற போது தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் தயாபரனுக்கு 14 வாக்குகள் கிடைத்திருந்தன.