சிறிலங்காவைச் சுற்றி 167 கப்பல்களின் சிதைவுகள்
சிறிலங்காவை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் 167 கப்பல்களின் சிதைவுகள் காணப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தியப் பெருங்கடல் சுழியோடிகள் சங்கம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மூழ்கிப் போன இந்தக் கப்பலின் சிதைவுகள் கடல்சார் சுற்றுலாவுக்கான சிறந்த வாய்ப்பை வழங்குவதாகவும் அந்தக் கருத்தரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, சிறிலங்காவின் சுற்றுலா துறையில், சுழியோடும் சுற்றுலா, கப்பல் சிதைவுகளைப் பார்வையிடுவது மற்றும் நீருக்கடியில் சுற்றுலா ஆகியவை இடம்பெறவில்லை.
கப்பல் சிதைவுகள் மற்றும் நீருக்கடியில் சாகசத்தை ஒரு வலுவான, புதிய சுற்றுலாப் பொருளாக சிறிலங்கா முன்னிலைப்படுத்த முடியும் என்றும் இந்தக் கருத்தரங்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.