திருமலையை எரிபொருள் கேந்திரமாக்கும் முத்தரப்பு பேச்சுக்கள் தாமதம்
திருகோணமலையை எரிபொருள் கேந்திரமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு கலந்துரையாடல்கள் பிற்போடப்பட்டுள்ளன.
முன்னதாக இந்தக் கலந்துரையாடலை ஜூன் மாதம் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது, ஜூலை மாதம் இந்தக் கலந்துரையாடலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தரப்பு, திட்டமிடப்பட்ட நாட்களில் பேச்சுக்களில் கலந்து கொள்ள முடியாததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதத்திற்குள் இந்த கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளோம், ஆனால் திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை, என்றும் ஆறு மாத காலத்திற்குள் இந்தக் கலந்துரையாடல்கள் இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
திருகோணமலையை எரிபொருள் கேந்திரமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்பு பயணத்தின் போது மூன்று நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.