இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவது இடைநிறுத்தம்
சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக இஸ்ரேலுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல்- ஈரான் போர் தீவிரமடைந்துள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் தற்போது சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் கட்டுமானம், வீட்டுப் பராமரிப்பு, விவசாயத் துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
பதற்றம் தணியும் வரை இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப வேண்டாம் என டெல் அவிவ்வில் உள்ள சிறிலங்கா தூதரகம் ஏற்கனவே வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் பணியாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்கள் ஒவ்வொருவரும் 1200 தொடக்கம் 1500 வரையான டொலர்களை வருமானமாகப் பெறுகின்ற நிலையில், பிராந்திய பதற்றத்தினால் ஏற்பட்டுள்ள வேலையிழப்புகள் சிறிலங்கா அதிகாரிகளை கவலை கொள்ள வைத்துள்ளது.
டெல்அவிவ்வில் ஈரான் நடத்திய ஏஏவுகணைத் தாக்குதலில், சிறிலங்கா தூதரகப் பணியாளர் ஒருவர் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பும் சிறியளவில் சேதம் அடைந்துள்ளது. எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதேவேளை மற்றொரு ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் சிறியளவில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இரண்டு பேர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் சிறிலங்கா தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.