மேலும்

உள்ளூராட்சித் தேர்தலில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள், ஆசனங்கள் – இறுதி முடிவு

local-election results (2)சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் அனைத்து முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான, சிறிலங்கா பொதுஜன முன்னணி, 239 சபைகளைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில், 4,941,952 வாக்குகளை (44.65%) பெற்றுள்ளதன் மூலம், சிறிலங்கா பொது ஜன முன்னணிக்கு   3369 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

15 மாவட்டங்களில் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு அதிகளவு வாக்குகள் கிடைத்துள்ளன.

இரண்டாமிடத்தை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுள்ளது. இந்தக் கட்சி 41 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளது.  ஐதேகவுக்கு, 3,612,259 வாக்குகள் (32.63%) கிடைத்துள்ளன. இந்தக் கட்சிக்கு  2385 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

மன்னார், நுவரெலிய, அம்பாறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் ஐதேக அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் தமிழ், மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து அமைத்த கூட்டணிகளின் மூலமே ஐதேகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

ஐதேக கொழும்பு, தெகிவளை- கல்கிசை, நீர்கொழும்பு, மாநகரசபைகள், மற்றும் கொலன்னாவ நகரசபை, வத்தளை- மாபொல நகரசபை உள்ளிட்ட 41 சபைகளைக் கைப்பற்றியுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி வடக்கு உள்ளிட்ட சில இடங்களில் தனித்து கை சின்னத்திலும், ஏனைய இடங்களில்,  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிட்டிருந்தது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 989,821 வாக்குகளை (8.94%) பெற்று 674 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி,  சிறிலங்கா சுதந்திரக் கட்சி 491,835 வாக்குகளை (   4.44% ) பெற்று 358 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம், மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் மொத்தமாக, 1,481,656 வாக்குகளை (13.38%) பெற்று மொத்தம் 1032 ஆசனங்களை இந்த இரண்டு கட்சிகளும் கைப்பற்றியுள்ளன.

இந்தக் கட்சிகள் 10 உள்ளூராட்சி சபைகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளன.

ஜேவிபி   693,875 வாக்குகளை  (6.27% )  பெற்று 431 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. எனினும் எந்தவொரு உள்ளூராட்சி சபையையும் ஜேவிபி கைப்பற்றவில்லை.

அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  சுமார் 339,675   வாக்குகளை (3.07%)  பெற்றுள்ளது. கூட்டமைப்பு 38 உள்ளூராட்சி சபைகளில் 407 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இறுதி முடிவுகள்

சிறிலங்கா பொதுஜன முன்னணி-  4,941,952 –  44.65% –    3369
ஐக்கிய தேசியக் கட்சி- 3,612,259-   32.63%     – 2385
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –    989,821 –   8.94% – 674
ஜேவிபி  – 693,875     – 6.27%     -431
சிறிலங்கா சுதந்திரக் கட்சி-  491,835     – 4.44%     – 358
இலங்கை தமிழ் அரசுக் கட்சி-     339,675     – 3.07% –  407

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *