மேலும்

உதயசூரியன் சின்னத்தில் போட்டியா? – மறுக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

cmஅடுத்த மாகாணசபைத் தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக வெளியான தகவல்களை நிராகரித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் தலைமையை விமர்சித்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் கேள்வி- பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதையடுத்து, ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச்செயலர் சிவசக்தி ஆனந்தன், வவுனியாவில் நடந்த கூட்டம் ஒன்றில், அடுத்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும், தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா போட்டியிடுவார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ வடக்கு கிழக்கில் இத்தேர்தல் காலத்தில் என் பெயரை இழுத்து கட்சிகளின் சார்பிலும் தனிப்பட்ட வேட்பாளர்கள் சார்பிலும் நன்மைகளைப் பெற பலர் எத்தனிக்கின்றார்கள் என்று தெரியவருகின்றது.

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி நான் எந்தவித முடிவும் எடுக்காமலேயே என்னுடைய சின்னம் பற்றி எல்லாம் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

நான் ஏற்கனவே எனது கருத்துக்களை வெளியிட்டு விட்டேன். ஊழலற்ற, நேர்மையான, தகைமையுடைய,தமது மக்களை நேசிக்கும் வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள் என்று கோரியுள்ளேன்.

உள்ளூராட்சியில் கட்சிகள் புகுந்ததால் இதுகாறும் எமது உள்ளூராட்சி மன்றங்கள் பலவிதமான சிக்கல்களை எதிர் நோக்கி வந்துள்ளன.

இதே போன்றுதான் முன்னர் அரசியல்வாதிகளும் அரசியலும் புகுந்து எமது கூட்டுறவு சங்கங்களை சின்னாபின்னமாக்கி வைத்தன.

நான் இதுவரையில் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றியோ கட்சி, சின்னம் பற்றியோ இப்போது சிந்திக்கவில்லை.

எனது அரசியல் கொள்கைகள் கிட்டத்தட்ட தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஒத்தது என்று ஏற்கனவே கூறியுள்ளேன்.

அத்துடன் அக்கொள்கையானது 2013ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒத்தது என்றும் கூறியுள்ளேன்.

தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களுடன் ஒத்த கருத்துடையவர்களை நான் மதிக்கின்றேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *