உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகளின்றி நிறைவேற்றப்பட்டது. புதிய உள்ளூராட்சித் தேர்தல் முறை தெரிவு முறைகளுடன், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் நேற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன் போது, 120 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஐதேக, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஜேவிபி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன ஆதரவாக வாக்களித்தன.
எவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை 44 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தனர். மேலும் 60 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை.
இந்த திருத்தச்சட்டத்தின் மூலம், உள்ளூராட்சி சபைகளுக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் நேரடியான தெரிவு முறை ஆகியன இணைந்த கலப்பு முறையின் கீழ் தேர்தல் நடைபெறும். நேரடியாக 60 வீத உறுப்பினர்களும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழு் 40 வீத உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர்.