மேலும்

அஸ்வர் விட்டுக்கொடுத்த பதவியை ஏற்க மறுக்கிறார் அமீர் அலி

ameer-aliஅகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமீர் அலியை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு வசதியாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஆளும்கட்சியின் உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

ஆனால், அமீர் அலி அந்தப் பதவியை நிராகரித்துள்ளார் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலர் வை.எல்.எஸ் ஹமீட் தெரிவித்துள்ளார்.

“இந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அமீர் அலி இல்லை.இது ஒரு முக்கியமான தருணம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமீர் அலிக்கு நாடாளுமன்றத்தில் இடமளிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டு வந்தோம். ஆனால் வாய்ப்பளிக்கப்படவில்லை.

சிறிலங்கா அதிபருக்கு பொதுபல சேனா ஆதரவளிக்க முடிவு செய்துள்ள சூழலில் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வரும் அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக அகில இலங்கை முலிம் காங்கிரஸ் முடிவெடுப்பதற்கான செயல்முறைகளில் ஈடுபட்டுள்ளது.

நாம் ஒன்றும் அவசரமாக முடிவெடுக்க வேண்டியதில்லை.

அரசாங்கத்துக்கு சிறுபான்மையினர் குறித்து தேர்தல் நேரத்தில் தான் நினைவுக்கு வருகிறது.

பொதுவேட்பாளரின் தேர்தல் அறிக்கை வரும் வரை காத்திருப்போம்.அதற்குப் பின்னர் ஒரு முடிவை எடுப்போம்.

அமீர் அலி இன்று தனது தொகுதி மக்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்பது குறித்து மக்களின் கருத்தைக் கேட்கவுள்ளார்.

மக்களின் விருப்பப்படி நாடாளுமன்ற ஆசனத்தை அவர் ஏற்றுக் கொண்டாலும்கூட, அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க எடுத்த முடிவாக அர்த்தமாகாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *