மேலும்

ஆட்கடத்தல்களுக்கு சிறிலங்கா கடற்படை பயன்படுத்திய வான் கைப்பற்றப்பட்டது

sl-navyமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், தெகிவளையில் 5 மாணவர்கள் கடத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு ஆட்கடத்தல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றை, திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழு அண்மையில் திருகோணமலை கடற்படைத் தளத்துக்குச் சென்றிருந்த போது, அங்கு இந்த வான் இருப்பது கண்டறியப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த வானைக் கைப்பற்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சென்ற போது, அதற்கு கடற்படையினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனினும், கடற்படைத் தளபதிக்கு இந்த விவகாரம் தெரியப்படுத்தப்பட்ட பின்னரே, குறித்த வானை சிறிலங்கா கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள இந்த வான், பல்வேறு ஆட்கடத்தல் சம்பவங்களை மேற்கொள்ள  பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

2010 ஆம் ஆண்டு பின்னர் இந்த வான், கடற்படை இலக்கத்தகட்டுடன், கடற்படையின் தேவைக்காகப்  பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த ஆட்கடத்தல்கள் தொடர்பாக நடத்தப்பட்டுள்ள விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வரும் வெள்ளிக்கிழமை, கடற்படையின் 5 முக்கிய அதிகாரிகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

கொழும்பில் கடத்தப்பட்டவர்கள் திருகோணமலை இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பான ஆதாரங்கள் உள்ளதால், அப்போது கிழக்கு கடற்படைத் தளபதியாக இருந்த வைஸ் அட்மிரல் ஜயந்த கொலம்பகேயிடமும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *